
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “இனி வரும் காலங்களில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் இணைப்புகள் புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படும். ஏற்கெனவே, திருவாரூர் உள்ளிட்ட 3 கோயில்களின் தேரோடும் வீதிகளில் மின் இணைப்பை புதைவடமாக மாற்றும் பணி நடக்கிறது. தேரோட்டம் நடைபெறும் கோயிலின் தேர் வீதிகளில் மின் இணைப்பு புதைவடத்தில் கொண்டு செல்லப்படும்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, தஞ்சை களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை நடந்த தேர் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தின் காரணமாக 11 பேர் பலியாகினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பேரவையில் அமைச்சர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் இருந்து 4 கி.மீ தொலைவில் களிமேடு எனும் கிராமத்தில் அமைந்துள்ள 150 ஆண்டுகள் பழமையான அப்பர் மடத்தில், 94 ஆம் ஆண்டான மூன்று நாள் நடக்கும் அப்பர் சதய திருவிழா செவ்வாய்கிழமை தொடங்கியது. இந்நிலையில் இந்த திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு அப்பர் மடத்திலிருந்து மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது.
தொடர்ந்து அப்பர் மடத்தில் இருந்து தொடங்கிய தேர் வீதியுலா பிரதான சாலை, மேலத்தெரு, தெற்குத்தெரு, கீழத்தெரு வழியாகச் சென்று நேற்று அதிகாலை 3.15 மணியளவில் தேரானது கீழ்த்தெருவிலிருந்து முதன்மை சாலைக்கு வந்தது. அப்போது திருப்பத்தில் சற்று உயரமான சாலையாக இருந்ததால் அதில் ஏறும்போது தேர் நிலைகுலைந்து, சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசி விபத்து நேரிட்டது.
இதில் தேரில் இருந்தவர்கள், தேரை இழுத்து வந்தவர்கள், அதன் அருகில் நின்றவர்கள் என அனைவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் 11 பேர் மின்சாரம் பாயந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 13 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர், தீயணைப்பு துறையினர் அங்கு வந்து தீயில் எரிந்த தேரை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர்.இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்சம் அறிவித்தது. மேலும் இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் அறிவித்தது. கோயில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் கம்பிகள் இனி புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.