
விலையை குறைக்காதது- மாநில மக்களுக்கு அநீதி
பிரதமர் மோடி கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களோடு ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர்,தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படவில்லை, இதனால் அந்த மாநிலங்களில் மக்கள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர், இது அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும், பெட்ரோல் - டீசல் விலை உயர்வையடுத்து வாட் வரியை குறைக்க வேண்டும் என்றும், வாட் வரியை குறைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு உதவியாக இருக்கும் என பிரதமர் மோடி கூறினார்.
மாநில அரசு மீது பழி போடும் மோடி
இதற்கு தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார், பெட்ரோல் விலையை குறைப்பது போல நடித்து மற்றவர் மீது பழியை போடுவது யார் என மக்களுக்கு தெரியும் என்றும், 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
மேலும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி மக்களை ஒன்றிய அரசு கஷ்டப்படுத்துவதாக குறிப்பிட்ட அவர், பெட்ரோல் விலையை குறைத்தது யார்? ஏற்றியது யார்? என்பதை மக்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன் என தெரிவித்தார். அதேபோல், சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது என்பதற்காக விலையை உயர்த்தாமல் இருந்தது யார்? எனவும் கேள்வி எழுப்பினார். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் முனைப்பு காட்டுவது யார்? நாடகமாடுவது யார்? என்பது மக்களுக்கே தெரியும் என கூறிய அவர், கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கடுமையாக வரி உயர்த்தியதாகவும், மத்திய அரசு கூறுவதற்கு முன்பே பெட்ரோல் மீதான விலையை தமிழ்நாடு அரசு குறைத்ததாகவும் குறிப்பிட்டார். பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் பிரதமர் மோடி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பேசியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தமிழகத்திற்கு 35 பைசா தான் கிடைக்கிறது
இதனை தொடர்ந்து பேசிய நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் சென்றால் தமிழகத்திற்கு அதிலிருந்து 35 பைசா தான் தற்போது கிடைப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் இதே கடந்த காலங்களில் ஒரு ரூபாய் மத்திய அரசுக்கு சென்றால் தமிழகத்திற்கு 60 பைசா வருவதாக தெரிவித்தார்.மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரிகளை பல மடங்கு விலையை உயர்த்தி விட்டு தற்போது தமிழக அரசின் குறைக்கவில்லை எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்