ஹிட்லர் அமைச்சர்கள் போலவே இந்தியாவிலும் பொய் சொல்லும் அமைச்சர்கள்.. சென்னையில் பொளந்துகட்டிய சித்தராமையா!

By Asianet TamilFirst Published Jul 31, 2022, 8:52 AM IST
Highlights

 பாஜக சமூக நீதிக்கு அரணாக இருக்க முடியாது என்பதை நான் உறுதியாக கூறுகிறேன் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர்' விருதை விசிக தலைவர் தொல். திருமாவளவன் வழங்கினார். இந்த விழாவில் விருதைப் பெற்றுக்கொண்டு சித்தராமையா பேசுகையில், “இந்த விருதை அம்பேத்கர் பெயரில் பெரியார் மண்ணில் பெறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பிற்படுத்தப்பட்டோருக்காக நான் பணியாற்றுகிறேன் என்பதைக் கண்டறிந்து இந்த விருதை வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கிறேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்துகிற போராட்டங்கள் எதுவாக இருந்தாலும் அது ஒடுக்குமுறைக்கு எதிரானது. சமூகத்தில் சாதியை உருவாக்கியவர்கள் சமத்துவமில்லாத நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்போதுதான் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்க முடியும் என்பதால்தான் சாதியை அவர்கள் உருவாக்கினர்.

இதையும் படிங்க: ஐயோ மேடம் என்ன மன்னிச்சிடுங்க.. தெரியாம உளறிட்டேன் , ஓவரா பேசி உடம்பை புண்ணாக்கிக் கொண்ட காங் எம்.பி.

இப்படியான வேறுபாடுகள் உள்ளவரை சமூக நீதியும் நியாயமும் கிடைக்காது. நாடு 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிலையில் நாம் ஒருங்கிணைந்து போராட வேண்டிய சூழலில் உள்ளோம். அம்பேத்கர் விளிம்பு நிலையில் உள்ள எல்லோருக்காகவும் போராடினார். தற்போது நாட்டை ஆண்டுகொண்டிருப்பவர்கள் கையாலேயே நாடு பிளவுபட்டு கொண்டிருக்கிறது. ஒரு ஆதிவாசி பெண்மணியைக் குடியரசு தலைவராக்கியதால் சமூக நீதிக்காக போராடுகிறோம் என்று பாஜகவினர் சொல்கிறார்கள். அவர் பதவிக்கு வந்ததில் எனக்கும் பெருமை உண்டு. ஆனால், சமூகநீதி என்னும் பெயரால் அவரை அந்தப் பதவியில் அவர்கள் அமர வைத்தார்களா என்பதுதான் என்னுடைய கேள்வி.  மோடி அமைச்சரவையில் உள்ள ஓர் அமைச்சர், அம்பேத்கரின் கருத்தை மாற்றவே ஆட்சிக்கு வந்தோம் என்கிறார். இதெல்லாம் பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் தெரியாமலா சொல்லியிருப்பார்.

இதையும் படிங்க: நீங்க ஏன் ஜெயிலில் கஷ்டப்படுறீங்க.? ஊழல்வாதிங்க பெயரை சொல்லுங்க பார்த்தா.. பற்ற வைக்கும் மிதுன் சக்கரவர்த்தி!

அந்த அமைச்சர் பிரதமரின் அனுமதி இல்லாமல் கூறினால் இந்நேரம் பதவி பறிபோயிருக்கும். பாஜக சமூக நீதிக்கு அரணாக இருக்க முடியாது என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். 97 ஆண்டுகளில்  விளிம்புநிலை மக்களை இதுவரை ஏன் உயர் பதவிக்கு கொண்டு செல்லவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையே ஹிட்லருடையதுதான். ஹிட்லர் அமைச்சர்களை பொய் சொல்வதற்காகவே வைத்திருந்தார். தற்போதும் அப்படித்தான் நடக்கிறது. இவர்களிடம் நாம் இட ஒதுக்கீட்டை எதிர்பார்க்க முடியுமா? இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை. அது பிச்சை கிடையாது. தனியார்மயத்திலும் இட ஒதுக்கீடு வேண்டி போராட வேண்டும். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் பிற்படுத்தப்பட்டோருக்கு நல்ல திட்டங்கள் வகுக்க வேண்டும் என நான் கோரிக்கை வைத்துள்ளேன்.” என்று சித்தராமையா பேசினார்.

முன்னதாக இந்த விழாவுக்காக சென்னை வந்த சித்தராமையா. தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்.

இதையும் படிங்க: பேனா சிலைக்கு எதிர்ப்பா.? எம்.ஜி.ஆர் நினைவிடம், சிவாஜி, பட்டேல் சிலைக்கு செலவானது என்ன கணக்கு.? சுபவீ பொளேர்!

click me!