வரப்போகிற 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை ஒட்டி திமுக, காங்கிரஸ், பாஜக என எல்லா கட்சிகளும் பல்வேறு பணிகளை தொடங்கியுள்ளது.
கடந்த 14 ஆம் தேதி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றார். பதவியேற்ற பின்பு பல இடங்களில் தீவிரமாக வேலை செய்து வருகிறார். அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் வெளிமாவட்ட பயணமாக உதயநிதி ஸ்டாலின் நாளை (டிசம்பர் 25) கோவையில் நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார்.
இந்த தகவல் திமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, 25 ஆம் தேதி காலை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்று புதுப்பிக்கப்பட்ட ஓடுதள பாதையை திறந்து வைக்கிறார். பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அன்று மாலையில் நடக்கும் விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.
அமைச்சரான பிறகு உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக கோவைக்கு வருகை தருகிறார் என்பது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க பாஜக மற்றொரு பக்கம் பக்காவான திட்டத்தை தீட்டியுள்ளது. பாஜக தலைவர் ஜே.பி நட்டா வருகிற 27 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவை வருகை தருகிறார். இது பாஜகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க.. வாட்ச் பில் இருக்கட்டும்; முதலில் டாஸ்மாக் பில்லை காட்டுங்க - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சவால் விட்ட பெண்!
வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும் தயாராகி வருகின்றன. இதுதவிர மாநிலங்களில் எம்.பி தொகுதிகளை கைப்பற்ற மாநில கட்சிகளும் ஆயத்தமாகி வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜக தங்கள் பாராளுமன்ற தேர்தல் பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பே முழுவீச்சில் தொடங்கி விட்டது. தமிழகத்தில் 25 தொகுதிகளை கைப்பற்றுவதே இலக்கு என்ற நோக்குடன் பாஜகவினர் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழக பாஜகவினருடன் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தேசிய பாஜக தலைவர் ஜே.பி நட்டா தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். இது தமிழக பாஜகவிடையே முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. ஜே.பி நட்டா வருகிற 27 ஆம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கு அவரை பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் திரண்டு வந்து வரவேற்கின்றனர்.
வரவேற்பை ஏற்று கொள்ளும் ஜே.பி நட்டா கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் காரமடைக்கு செல்கிறார். காரமடை வி.பி.ஆர் மஹாலில் பாஜகவின் நீலகிரி, கோவை பாராளுமன்ற தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. அதில், கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர் கொள்வது, தொகுதிகளில் பூத் கமிட்டியின் நிலை, மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறுவது என பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பல்வேறு ஆலோசனைகளையும் நிர்வாகிகளுக்கு வழங்க உள்ளார்.
இதற்கு முன்பு, கடந்த செப்டம்பர் மாதம் 2 நாள் பயணமாக ஜே.பி நட்டா, தமிழகம் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் தமிழகம் வருவது, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முதலில் உதயநிதி ஸ்டாலின், அடுத்து ஜே.பி நட்டா என அரசியல் தலைவர்கள் அடுத்ததடுத்து கோவைக்கு வருவது அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல கோவையிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க.. உத்தவ் தாக்கரேவுக்கு நடந்தது உதயநிதி ஸ்டாலினுக்கும் நடக்கும் ; அண்ணாமலை சொன்ன பிளாஷ்பேக் !!