பிரச்சாரத்தின் போது அமைச்சர் SP வேலுமணிக்கு எதிராக பேசக்கூடாது.. ஸ்டாலினுக்கு வாய் பூட்டு போட்ட நீதிமன்றம்..!

By vinoth kumarFirst Published Feb 18, 2021, 11:41 AM IST
Highlights

அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கை, தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கை, தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி  மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 220 டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதா என ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்திருக்கிறது. அதில் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என முதலமைச்சர், அமைச்சரவை, தலைமை செயலாளருக்கு லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை அனுப்பியுள்ளது. அதை அவர்கள் ஏற்றுகொண்டுள்ளனர். அதனால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார். 

இதற்கு மனுதாரர் தரப்பில், ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்தாலும் அமைச்சருக்கு நற்சான்று அளிக்கப்படவில்லை என்றும் இந்த வழக்கை நேரடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க கூடாது. முதற்கட்ட விசாரணையில் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை அளித்திருக்கிறது. அதனால் மனுதாரர்கள் லஞ்ச ஒழிப்புதுறையின் அறிக்கையை எதிர்த்து மாவட்ட நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழ்நிலையில் இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும்,தேர்தல் பிரச்சாரத்தின் போது எஸ்பி.வேலுமனிக்கு எதிரான இந்த வழக்கை சுட்டிக்காட்டி அரசியல் கட்சியினர் பேச கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர். எப்போதும், உள்ளாட்சித்துறை ஊழலாட்சி என்ற விமர்சித்த வந்த ஸ்டாலினுக்கு வாய் பூட்டு போடப்பட்டுள்ளது. 

click me!