சேலத்தில் 10 நாட்களில் நடக்கப்போகும் அற்புதம்... கொரோனா நோயாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டிய அமைச்சர்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 14, 2021, 5:39 PM IST
Highlights

சேலம் இரும்பாலை பகுதியில் புதியதாக ஆக்சிஜன் வசதியுடன் சுமார் 500 படுக்கைகள் வசதிகள் கூடிய தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சேலத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்றால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சேலம் இரும்பாலை பகுதியில் புதியதாக ஆக்சிஜன் வசதியுடன் சுமார் 500 படுக்கைகள் வசதிகள் கூடிய தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  “சேலம் மாவட்டத்தில் தினமும் 600 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி தேவை அதிகமாக உள்ளது. இதனால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் ஒருபகுதியாக சேலம் இரும்பாலையில் 10 நாட்களுக்குள் தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணிகள் நிறைவடையும். இதற்கென 1000 கிலோ வாட் மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறையினர் ஒருங்கிணைந்து மருத்துவமனை அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் படுக்கைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

click me!