அரபிக் கடலில் உருவாகிறது டவ்-தே புயல்.. தமிழகம் கேரளாவில் கன மழைக்கு வாய்ப்பு.

By Ezhilarasan BabuFirst Published May 14, 2021, 5:17 PM IST
Highlights

இந்த புயல் குஜராத் மற்றும் பாகிஸ்தான் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரபிக்கடலில் உருவாகும் இந்தப் புயலால் லட்சத்தீவுகள் கடலோர மாநிலங்களான கேரளம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது

அரபிக்கடலில் நாளை சனிக்கிழமை டவ்-தே புயல் உருவாவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  நேற்று லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றது. இன்று அது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து 12 மணி நேரத்தில் புயலாகவும் வலுபெறக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. 

இதன் காரணமாக 14.05.2021: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் சூறைக் காற்றுடன் (30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில்) கூடிய அதிகன மழையும், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், திருப்பூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

15.05.2021: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் சூறைக் காற்றுடன் (30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில்)  கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் 16.05.2021 ,17.05.2021: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 18.05.2021: நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது புயலாக மாறவாய்ப்புள்ளதாகவும், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று மே 16ஆம் தேதி மத்திய அரபிக்கடல் வழியாக செல்கிறது, இந்த புயல் குஜராத் மற்றும் பாகிஸ்தான் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரபிக்கடலில் உருவாகும் இந்தப் புயலால் லட்சத்தீவுகள் கடலோர மாநிலங்களான கேரளம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப் பட்டுள்ளது. இந்த டவு-தே புயலால் தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

click me!