
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் குறித்து தனி கவனம் செலுத்தி ஆய்வு செய்து வரும் முதலமைச்சர், விரைவில் சட்டத்தின்படி அங்கு நடவடிக்கை எடுப்பார் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகரபாபு தெரிவித்துள்ளார்.சென்னை இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், சிதம்பரம் நடராஜர் கோயிலின் உண்மை நிலையை கண்டறிவதற்கு இணை ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தவுடன் , சட்ட வல்லுநர்களுடனும் கலந்தாலோசித்துக் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும் சிதம்பர நடராஜர் கோவில் ஏற்படும் பிரச்சினைகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக அதில் தனிகவனம் செலுத்தி வருகிறார் என்று அமைச்சர் தெரிவித்தார். இதனிடையே அதுதொடர்பான விவரங்களை ஆய்வு செய்து வரும் முதலமைச்சர், விரைவில் ஒரு நல்ல முடிவெடுத்து, சட்டத்தின்படி அங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
முன்னதாக, சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கும் கனகசபை எனும் சிற்றம்பல மேடைக்கு பக்தர்கள் செல்வதற்கு கோயில் நிர்வாகத்தால் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண் பக்தர் ஒருவர் சாமி கும்பிட சென்றபோது அங்குள்ள கனகசபை மேடையில் ஏற முயன்றதாக அவரை தீட்சிதர்கள் சாதிப்பெயரை சொல்லி திட்டியதாக பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் அந்த பெண் அளித்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவும் செய்தனர்.
இருப்பினும் இதுக்குறித்து பேசும் தீட்சிதர்கள், கோயிலுக்கும் தீட்சிதர் சமூகத்துக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சிலர் தீய செயல்களில் ஈடுப்படுகின்றனர். பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் சிற்றம்பல மேடை மீது யாரும் ஏறவேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தில், பூஜையில் யாரும் தலையிடக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவும் உள்ளது என தெரிவிக்கின்றனர்.
மேலும் கோயிலுக்கு வரும் மக்கள் மற்றும் நிர்வாகத்தின் நலன் கருதி கனகசபை எனப்படும் சிற்றம்பல மேடை மீது யாரையும் அனுமதிக்க கூடாது என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் 450 தீட்சிதர்கள் கருத்து கேட்கப்பட்டு அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆதரவில் இந்த முடிவு எடுக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை கோயிலுக்கு வரும் பக்தர்கள், உள்ளூர் மக்கள், கோயில் தீட்சிதர்கள், தீட்சிதர் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவரும் கடைபிடித்து வருவதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழலில் கணேச தீட்சிதர் என்பவர் கோயில் விதிமுறையை மீறி தமது மனைவியை கனகசபை மண்டபத்திற்கு அழைத்து சென்றதால் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் மீண்டும் சாமி கும்பிட சென்றபோது சக தீட்சிதர்கள் தடுத்து அவரை தாக்கியதாகவும், கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் இந்த கணேச தீட்சிதர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகார் மீது 3 தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.