“தமிழ் என்றால் நமக்குத் தானாக ஒரு உத்வேகம் வந்துவிடுகிறது. அது உள்ளூர் தமிழனாக இருந்தாலும் சரி, உக்ரைனில் தமிழனாக இருந்தாலும் சரி..”
இந்திய இசை உலகில் நாதஸ்வர இசை சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் கொள்ளுப் பேரன் திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அவர் மறைந்த முதல்வர் கருணாநிதியின் உறவினர் என்ற வகையிலும், இந்தத் திருமணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர், “டி.என்.ராஜரத்தினம் பிள்ளை என்று பரவலாக அறியப்படுகிற, திருமருகல் நடேச பிள்ளை ராஜரத்தினம் பிள்ளைக்கு கீர்த்தனைகளை வாசிப்பதற்கு கற்றுக் கொடுத்திருப்பவர்களில் மிக மிக முக்கியமாக இருந்தவர் யார் என்று கேட்டால், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய அருமைத் தந்தை - என்னுடைய தாத்தா முத்துவேலர் அவர்கள்.
தோடி ராகத்தை வாசிப்பதில் நாதஸ்வர கலைஞர்களுள் புகழ்பெற்ற ஒரு தன்னிகரில்லா விற்பனராக ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் விளங்கியிருக்கிறார்கள்” என்று கூறினார். நாதஸ்வரம், தவில் கலைஞர்கள் மேல் சட்டை அணியக்கூடாது, காலில் செருப்பு அணியக்கூடாது, கிராப் தலையுடன் இருக்கக்கூடாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகளை உடைத்து, சுயமரியாதையை நிலைநாட்டியவர் ராஜரத்தினம் பிள்ளை.
நேற்றுடன் உக்ரைனில் உள்ள அனைத்து தமிழர்களும் மீட்கப்பட்டது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ் என்றால் நமக்குத் தானாக ஒரு உத்வேகம் வந்துவிடுகிறது. அது உள்ளூர் தமிழனாக இருந்தாலும் சரி, உக்ரைனில் இருக்கும் தமிழனாக இருந்தாலும் அவர்களையும் காப்பாற்றுகிற இயக்கம் எது என்பது உங்களுக்குத் தெரியும். உக்ரைனில் இருப்பவர்கள் அங்கு அகதிகளாக ஆகிவிடுவார்களோ அல்லது ஆபத்தில் சிக்கி விடுவார்களோ என்று கருதிக் கொண்டிருந்த நேரத்தில் ஏறக்குறைய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 2000 பேர் அங்கு இருக்கிறார்கள் என்ற செய்தியை நாம் கேள்விப்பட்டவுடன் இந்தியாவில் எந்த மாநிலமும் முன்வராத நிலையில் முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் அவர்கள் அத்தனை பேரையும் இங்கு அழைத்து வருவதற்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அவர்கள் அத்தனை பேரையும் பத்திரமாக அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக அனைத்து முயற்ச்களும் எடுத்தோம்.
நேற்றோடு அத்தனை பேரும் தமிழகம் வந்து சேர்ந்து விட்டார்கள். கடைசியாக வந்த 9 பேரை வரவேற்பதற்காக நானே விமான நிலையத்திற்கு சென்றேன். அதற்காக நம்முடைய திருச்சி சிவா அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து, அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, நம்முடைய அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் தம்பி டி.ஆர்.பி.ராஜா, அரசுத் துறையைச் சார்ந்திருக்கும் அதிகாரிகளை எல்லாம் குழுவாக அமைத்து, டெல்லியிலேயே பத்து நாள் தங்கி அத்தனை பேரையும் அழைத்து வந்திருக்கிறார்கள். தமிழன் எங்கிருந்தாலும் அவர்களைக் காப்பாற்றுகிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதற்கு இதை ஒரு எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கூறினார்.
இந்தத் திருமணம் மு.க.ஸ்டாலின் இல்ல திருமணமாகும். மணமகன் கருணாரத்தினம் முதல்வர் ஸ்டாலினின் மாமனார் ஜெயராமனின் பேரன் ஆவார். திருமணத்தில் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த திமுக தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.