
சென்னை: கோயில்களில் அறங்காவலர்கள் நியமனத்துக்கு பின்னரே நகைகள் உருக்கும் பணிகள் தொடங்கும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார்.
சென்னையில் உள்ள சூளளை அங்காள பரமேஸ்வரி மற்றும் காசி விஸ்வநாதர் கோயில், சொக்கவேல் சுப்பிரமணிசாமி கோயில், சீனிவாச பெருமாள் கோயில்களில் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். இதில் பெரிய கோயில், சின்ன கோயில் என்ற பாகுபாடு கிடையாது.
பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் முழுமையாக செய்து தருவதுதான் அறநிலையத்துறையின் நோக்கமாக உள்ளது. கடந்த ஆட்சியில் நகைகளை சரிபார்க்கும் பணிகள் கூட முறையாக செய்யவில்லை.
கோயில் நகைகளை பிரிக்க சரியாக ஓராண்டு ஆகும். அதற்குள் அறங்காவலர் நியமனம் குறித்து நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பாகவே அனைத்து பணிகளையும் இந்து சமய அறநிலையத்துறை தொடங்கி விட்டது. அறங்காவலர்களை நியனம் செய்ய போகிறோம் என்பதை நாளிதழ்களில் விளம்பரமாக வெளியிட்டு விட்டோம்.
ஆகையால் அறங்காவலர் நியமனத்துக்கு பின்னர் தான் கோயில் நகைகளை உருக்கும் பணிகள் தொடங்கும். நகைகளை பிரிக்க, அதனை உருக்க நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பை மகிழ்ச்சியாக வரவேற்கிறோம்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கடவுள் சொத்து கடவுளுக்கே என்று நினைப்பவர்களை தான் கோயில் அறங்காவலர்களாக நியமிக்க உள்ளோம். ஆனால் அறநிலையத்துறை மீது ஏதாவது புகார் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இப்படி களங்கம் விளைவிக்கும் வகையில் ஏதாவது பேசிக் கொண்டு இருக்கிறார்.
அம்மா உணவகங்களில் ஆட்கள் குறைப்புக்கு காரணம் நிர்வாக நடவடிக்கை. அது நிர்வாக ரீதியாக நடப்பது. இதில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கும் இடமே கிடையாது. மறைந்த அரசியல் தலைவர்களின் பெயரில் கொண்டு வரப்பட்ட எந்த திட்டங்களை மறைக்கும் எண்ணம் இந்த அரசுக்கும், திமுகவுக்கும் இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இதனிடையே அமைச்சர் சேகர்பாபு ஒரு டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் திருக்கோயிலில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம்.
திருக்கோயில் அன்னதானம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது. இன்று பொதுமக்களோடு அன்னதான உணவு உட்கொண்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். மக்களோடு, மக்களாக அமைச்சர் ஒருவர் கோயில் அன்னதானம் சாப்பிட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.