எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.. பெகாசஸை வாங்கச் சொன்னது மோடியா, அமித்ஷாவா.? கேட்கிறார் ஜோதிமணி!

By Asianet TamilFirst Published Oct 29, 2021, 9:32 PM IST
Highlights

பெகாசஸ் மென்பொருள் மூலம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மட்டும் மோடி அரசு உளவு பார்க்கவில்லை. ஊடகவியலாளர்கள், பொதுமக்களையும் மோடி அரசு உளவு பார்த்து உள்ளது.

பெகாசஸ் உளவு மென்பொருள் பிரதமர் மோடி உத்தரவின்பேரில் வாங்கபட்டதா அல்லது உள் துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவின் பெயரில் வாங்கப்பட்டதா என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் ஜோதிமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜோதிமணி, “பெகாசஸ் மென்பொருள் குறித்து காங்கிரஸ் கட்சி என்ன சொல்லி நாடாளுமன்றத்தில் போராட்டத்தை முன்னெடுத்ததோ அதையேத்தான் இன்று உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது. பெகாசஸ் மென்பொருள் மூலம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மட்டும் மோடி அரசு உளவு பார்க்கவில்லை. ஊடகவியலாளர்கள், பொதுமக்களையும் மோடி அரசு உளவு பார்த்து உள்ளது. அது மட்டுமல்ல பெகாசஸ் மென்பொருளை தனிப்பட்ட நபர்கள் வாங்குவதற்கு சாத்தியக்கூறுகளே கிடையாது. அரசுகள் மட்டுமே வாங்க முடியும்.

எனவே, இந்திய அரசு இதுபோன்ற உளவு பார்க்கும் மென்பொருட்களை இஸ்ரேலிடம் வாங்கியது, முக்கியமான உயர் பதவியில் உள்ளவர்களின் தகவல்களை பெகாஸஸ் மென்பொருளின் சர்வரில் பதிவு ஆகியிருக்கும். எனவே, இந்திய தேசத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வேலையை எதிரி நாடு செய்யக்கூடிய வேலையைத்தான் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செய்துள்ளது. ஒரே ஒரு கேள்விதான். இந்த மென்பொருளை அரசாங்கம்தான் வாங்க வேண்டும் என்றால் பிரதமர் மோடி உத்தரவின்பேரில் இது வாங்க பட்டதா அல்லது உள் துறை அமைச்சர் உத்தரவின் பெயரில் வாங்கப்பட்டதா என்பதைத் தெரிவிக்க வேண்டும். இந்த தேசத் துரோக குற்றத்தில் ஈடுபட்டது யார்.

இந்த உண்மைகள் எல்லாம் வெளியே வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி  கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பல போராட்டங்களை நடத்தியது. இன்று உச்சநீதிமன்றமே மத்திய அரசாங்கம் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாத எனவும் தேச பாதுகாப்பு எனச் சொல்லி மத்திய அரசு தவறு செய்துகொண்டிருக்கிறது எனக் கூறியுள்ளது. அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், சாதாரண மனிதர்கள் என இந்த தேசத்தில் எல்லோருக்கும் முழு சுதந்திரம் உள்ளது. இந்த விவகாரத்தில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்துள்ளது.  எனவே, இந்த விவகாரத்தில் மிக விரைவிலேயே உண்மைகள் வெளியே வரும்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுவது போல வரும் நவம்பர் மாதம் குளிர்கால கூட்டத்தொடரில் இதுதொடர்பாக கேள்வி எழுப்புவோம். அந்த கூட்டத்தொடரில் மோடி அரசு இந்த தேசத்திற்கு நிச்சயமாகப் பதில் சொல்ல வேண்டும்” என்று ஜோதிமணி தெரிவித்தார். 

click me!