
தீபாவளி நெருங்கிவிட்டதை ஒட்டி நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் போதிய இருப்பு உள்ளதா என சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகள் மற்றும் கிடங்குகளில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 330 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் இதுவரை ஒரு கோடியே 64 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுவிட்டதாகவும் இன்னும் 25 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கே ஸ்மார்ட் கார்டுகள் வழங்க வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தான் ஸ்மார்ட் கார்டு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஸ்மார்ட் கார்டுகள் பெறாதவர்கள் விரைவில் பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்தார்.
ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்கள், அதைப் பெறும்வரை பழைய குடும்ப அட்டையை வைத்தே நியாயவிலைக் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி அனைத்து பொருட்களையும் மக்கள் வாங்கிக்கொள்ளலாம் எனவும் நியாயவிலைக் கடைகளில் அதற்கான போதிய பொருட்கள் இருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் பொதுவிநியோகத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதாக கருத்து இருப்பதாக அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர் காமராஜ், திமுக ஆட்சிக்காலத்தை விட பொதுவிநியோகத்திட்டம் தற்போது சிறப்பாக செயல்படுவதாகவும் திமுக ஆட்சிக் காலத்தில் உண்மையான பயனாளிகள் தான் பயன்பெற்றார்களா? எனவும் கேள்வி எழுப்பினார்.