செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் சிறப்பு வசதியா.? ஒரு கைதி மற்ற கைதிக்கு சொல்லி விடுவார்- மறுக்கும் ரகுபதி

By Ajmal Khan  |  First Published Jul 25, 2023, 11:27 AM IST

சிறைச்சாலையில் ஏசி வசதி எல்லாம் வைத்துக் கொடுக்க முடியாது. அப்படி வைத்து கொடுத்தால் வெளியில் தெரிந்துவிடும். ஒரு கைதி அடுத்த கைதிக்கு சொல்லிவிடுவார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 


புழல் சிறையில் செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஏசி வசதி, தனி உணவு என பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியது. இதுகுறித்து ஓய்வுப்பெற்ற நீதிபதி கொண்டு விசாரனை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்தநிலையில் இது தொடர்பாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சிறைச்சாலையில் முதல் வகுப்பு கைதிக்கு என்னென்ன சலுகைகள் உள்ளதோ அந்த சலுகைகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. 

Latest Videos

undefined

செந்தில் பாலாஜிக்கு சிறப்பு வசதியா.?

கூடுதலாக யாருக்கும் எந்த சலுகையும் வழங்க முடியாது. கேண்டினில் உணவு வாங்கிக் கொள்ள அனுமதி உண்டு. அந்த வகையில் வாரம் ஆயிரம் ரூபாய் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். தங்களுக்கு விரும்பிய உணவை வாங்கிக் கொள்ளலாம். வெளியில் இருந்து எந்த உணவையும் கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை. சிறைச்சாலையில் ஏசி வசதி எல்லாம் வைத்துக் கொடுக்க முடியாது. அப்படி வைத்து கொடுத்தால் வெளியில் தெரிந்துவிடும். ஒரு கைதி அடுத்த கைதிக்கு சொல்லிவிடுவார். ஒரு முதல் வகுப்பு கைதி மற்றொரு முதல் வகுப்பு கைதிக்கு சொல்லிவிடுவார். எங்களைப் பொறுத்தவரை முதல் வகுப்பு கைதிகளுக்கு என்ன சலுகைகள் அதே சலுகை தான் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சி

அமைச்சர் என்கின்ற முறையில திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர் என்பதற்காகவோ கூடுதல் வசதி எதுவும் அளிக்கப்படவில்லை. செந்தில் பாலாஜி தொடர்பான  வழக்கு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால் அவருக்கு வேறு ஏதேனும் இடைஞ்சல் கொடுக்க வேண்டும் என்று நினைப்பில் இப்படி பத்திரிக்கைக்கு ஒரு தவறான தகவலை பரப்புகிறார்கள்.  இதன் மூலம் சிறையில் ஏதோ அவர் சொகுசாக வாழ்கிறார் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்கள். அப்படி சிறைத்துறை செய்வது கிடையாது. நாங்களும் செய்யவும் மாட்டோம். தமிழக முதலமைச்சர் அதற்கு அனுமதி அளிக்க மாட்டார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

அசோக் குமார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறாரா.? செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுக்கும் அமலாக்கத்துறை

click me!