அதிமுக ஆதரவில்லாமல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது !! நாங்கள் 10 அமைச்சர்கள் பதவி கேட்போம்… காமெடி பண்ணிய அமைச்சர் !!

By Selvanayagam PFirst Published Sep 3, 2018, 8:47 AM IST
Highlights

அதிமுகவின் அடுத்த லட்சியம் மத்தியில் ஆட்சி அமைப்பதுதான் என்றும், அதிமுக ஆதரவில்லாமல் அங்கு வேறு யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றும் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக ஆதரவில் அமையும் மத்திய அமைச்சரவையில்  நாங்கள் 10 அமைச்சர்கள் பதவியைக் கேட்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. பெருமபான்மை இல்லாமல் குறைவான எம்எல்ஏக்களின் ஆதரவுடன்தான் தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் இபிஎஸ கைகளில் உள்ளது.

அதுவும் மத்தியில் ஆளும் பாஜவின் ஆதரவுடன் தான் இங்கு ஆட்சி நடப்பதாகவும், மத்திய அரசு தான் தமிழக அரசு கவிழாமல் முட்டுக் கொடுத்து பாதுகாத்து வருவதாகவும் பரவலாக பேச்சு எழுந்துள்ளது.

அதுவும் ஜெயலலிதா விரும்பாத பல திட்டங்களை தமிழகத்துக்குள் அதிமுக அரசு அனுமதித்துள்ளதால்தான் இங்கு அதிமுக அரசு தொடருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுகவின் அடுத்த லட்சியம் மத்திய அரசுதான் என தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என அவர் தெரிவித்தார். ஜெயலலிதா இருந்த போது மத்திய அரசுக்கு ஆதரவு அளித்தார். அதற்காக அவர் மத்திய அமைச்சர் பதவி எதையும் கேட்டுப் பெறவில்லை.

ஆனால் நாங்கள் ஜெயலலிதா போல் இருக்க  மாட்டோம் என்றும் மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும் அவர்களிடம் அதிமுக 10 அமைச்சர்கள் பதவியைக் கேட்கும் எனவும்  கூறி  தொண்டர்களை ஆச்சரியப்படுத்தினார்.

அமைச்சர் ராஜேந்தி பாலாஜி ஏற்கனவே ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, எங்கள் ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்றும், ஏனென்றால் எல்லாம் மேலே இருக்கிறவன் பாத்துக்குவான் என்று சொல்லி சலசலப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!