எதிரிகளை சகட்டு மேனிக்கு ஏசும் டி.டி.வி !! பலமா ? பலவீனமா ?

By Selvanayagam PFirst Published Sep 3, 2018, 7:59 AM IST
Highlights

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பொது மேடைகளில் பேசும்போதும். செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போதும் ஓபிஎஸ்,இபிஎஸ் மற்றும் அமைச்சர்களை சகட்டு மேனிக்கு வெளுத்து வாங்குகிறார்

சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்ம் இபிஎஸ்ம் டி.டி.வி.தினகரனை முற்றிலுமாக ஒதுக்கி வைத்து விட்டு ஒன்று சேர்ந்தனர். தற்போது அவர்கள் கைகளில்தான் ஆட்சி அதிகாரம் உள்ளது.

இது தினகரன் மற்றும் சசிகலா தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எப்படியாவது இந்த ஆட்கியை கவிழ்த்துவிட வேண்டும் என துடித்து வருகின்றனர். டி.டி.வி.தினகரனை நம்பி 18 எம்எல்ஏக்களும் வெளியே வந்துவிட்டனர். அவர்கள் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில் தினகரன் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கூடுவது ஆளும் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மீட்டிங், போராட்டம் எதுவாக இருந்தாலும் அதற்கு முடிந்த அளவு தடை போட்டு வருகின்றனர்.

அதற்கேற்றார் போல தினகரன் செல்லும் இடமெல்லாம் கூடும் தொண்டர்களிடையே அவர் எதிரிகளை சகட்டு மேனிக்கு பேசி வருகிறார். அதுவும் அமைச்சர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக பேச முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக பேசி வருகிறார்.

மன்னார்குடியில் நேற்று  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய தினகரன் அமைச்சர்கள் காமராஜ் மற்றும் எஸ்,பி.வேலுமணி ஆகியோரை மிகவும்ஏளனமாக பேசினார். உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தங்களது குடும்பத்தில் நடந்த திருமண விழாவில் சாம்பார் வாளி தூக்கி சப்ளை செய்தவர்தான் என்றும், மூன்று வேளையும் எங்கள் விட்டில் தான் சாப்பிடுவார் என்றும், அப்படிப்பட்ட ஒருவர் எப்படி என்னை எதிர்த்துப் பேசலாம் என ஏசினார்.

அமைச்சர் வேலுமணியைப் பற்றி பேசும்போது, தன்னால்தான் அவர் அமைச்சர் ஆனார் என்றும் அதற்குரிய மரியாதையை அவர் தருவதில்லை என்றும் பேசினார்.

அமைச்சர்களை மட்டுமல்லாமல் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரையும் தினகரன் உரிய மரியாதை கொடுத்துப் பேசுவதில்லை. ஓபிஎஸ்ஐ ஜெ.வுக்கு அறிமுகப்படுத்தியதே நான்தான்  என்றும் இபிஎஸ் எப்படி இருந்த ஆள் இப்ப இப்படி இருக்கிறார் என்பதற்கு காரணமே தான் தான் என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறித்தும் தினகரன் மிக ஏளனமாகப் பேசினார்.

தினகரனின் பேச்சை அவரது தொண்டர்கள் விரும்பி ரசித்தாலும், மற்ற கட்சியினரும் நடுநிலை வகிப்பவர்களும் அதை ரசிக்கவில்லை. சரி அமைச்சர்கள்தான் சாம்பார் வாளி தூக்கினார்கள்.. நீங்கள் ஜெயலலிதாவிடம் அதைத்தானே செய்தீர்கள்…நீங்கள் முன்னேறி வந்ததைப் போன்றுதானே அவர்களும் முன்னேற நினைப்பார்கள் என நெட்டிசன்கள் தினகரனை  கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

தினகரனின் இந்த  அசட்டுத் துணிச்சல்  மிகுந்த பேச்சு அவருக்கு பலத்தைத் தருமா? அல்லது அந்தப் பேச்சே அவரது பலவீனமா ? என்பது போகப் போகத்தான் தெரியும். ஆனால் அரசியல் மேடைகளில் பேசும்போது நாகரீகமாக பேசுவது என்பது ஒரு பண்பாடு. அதை அனைவருமே பின்பற்ற வேண்டும் என்பதையே பொது மக்கள் விரும்புகின்றனர்.

click me!