
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்ற அமைச்சரவையில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு உள்ளார். புதிய அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் கொரோனா நெருக்கடியையும் மீறி பல்வேறு வகைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோயில்கள் தொடர்பாக மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் கவனம் பெறுள்ளன.
ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்கள் மீட்பு, திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை, அர்ச்சராக விரும்பும் பெண்களுக்கு பயிற்சி, கொரோனா ஊரடங்கு காரணமாக கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லாததால் அரசு மருத்துவமனைகளில் உள்ள ஏழை நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச அன்னதானம் விநியோகம் என அறநிலையத்துறை சார்பில் பல்வேறு அசத்தலான அறிவிப்புகளும், திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன.
தற்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள், பக்தர்கள் வசதிக்காக பொதுமக்கள் குறை கேட்பு (Call centre) சிறப்பு மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்துள்ளார்.
இந்த சேவையை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 044-28339999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு திருக்கோயில் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குறைகேட்பு சிறப்பு மையத்தில் பெறப்படும் கோரிக்கை விபரங்கள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்படும் கோரிக்கை பெறப்பட்டதற்கான ஒப்புதல் கோரிக்கைதாரர்களுக்கு உடனுக்குடன் அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கை நடவடிக்கை விவரங்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 15 நாட்களுக்குள் தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.