மத்திய அமைச்சர்களை சந்தித்த அமைச்சர் மா.சு... தமிழகத்திற்காக வைத்த 13 கோரிக்கைகள் என்னென்ன தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published Jul 15, 2021, 6:38 PM IST
Highlights

கொரோனா தடுப்பூசி, நீட் தேர்வு விலக்கு, எய்ம்ஸ் உள்ளிட்ட 13 கோரிக்கைகளுடன் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து 13 கோரிக்கைகளை ஒப்படைத்துள்ளார். 
 

கொரோனா தடுப்பூசி, நீட் தேர்வு விலக்கு, எய்ம்ஸ் உள்ளிட்ட 13 கோரிக்கைகளுடன் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து 13 கோரிக்கைகளை ஒப்படைத்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வந்த மக்கள், தற்போது நள்ளிரவு முதலே வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள ரெடியாக இருக்கின்றனர். ஆனால் அவ்வப்போது தமிழகத்தில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாடு மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும் தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், செப் 11 மற்றும் 12ம் தேதிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே அறிவித்திருந்தார். 

அதன்படி நேற்றிரவு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் கொரோனா தடுப்பு திட்ட அதிகாரி செந்தில்குமார், தேசிய சுகாதார குழுமத்தின் திட்ட அதிகாரி தரேஸ் அகமது ஆகியோரும் சென்றனர். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய அமைச்சர் உள்ளிட்டோர், இன்று பகலில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானையும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாலியாவையும்  சந்தித்தனர். 

அந்த சந்திப்பின் போது தமிழகத்தின் கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பாக 13 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களிடம் வழங்கினர். மேலும் தமிழகத்தின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் மத்திய அமைச்சர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். 

அந்த 13 கோரிக்கைகள் இதோ.... 

* தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி தேவை அதிகமாக உள்ளது. எனவே தேவைப்படும் தடுப்பூசிகளை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும்.

* மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

* புதிதாக தொடங்கப்படும் 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகளை தொடங்க வேண்டும்.

* தேசிய நல்வாழ்வு திட்ட செயலாக்கத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும். கூடுதல் நிதியும் ஒதுக்க வேண்டும்.

* தமிழகத்தில் 3,900 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த நோய்க்கு கூடுதலாக மருந்துகள் வழங்க வேண்டும்.

* நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்.

* கோவையில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும்.

* அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்பட்டோருக்கான ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

* செங்கல்பட்டு மற்றும் குன்னூரில் தடுப்பூசிகள் தயாரிப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

* கொரோனா 2-வது அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகப்பெரிய அளவில் ஏற்பட்டது. எனவே வருங்காலங்களில் இந்த தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் மேலாண்மை திட்டங்களை உருவாக்க வேண்டும்.

* தேசிய சுகாதார குழு திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

click me!