அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் 9 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் மோசடி.. பரபரப்பு புகார், நீதிமன்றம் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jul 15, 2021, 6:03 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் 95% கூட்டுறவு சங்கங்களுக்கு முறையான தேர்தல் நடத்தாமல் கடந்த அதிமுக ஆட்சியில் சேர்ந்த நிர்வாகிகளே தன்னிச்சையாக தேர்வு செய்யப்பட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூட்டுறவு சங்கங்களில் சுமார் 9 ஆயிரம் கோடி அளவிற்கு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கடன் மோசடி நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

கடந்த அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு புகார்  குறித்து விரிவான விசாரணை நடத்தகோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம் மணிக்காபுரம் புதூரைச் சேர்ந்த விஸ்வலிங்க சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அதில், கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலின் போது, திருப்பூர் மாணிக்காபுரம் புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் பதவிக்கு போட்டியிட தான் விண்ணப்பித்ததாகவும், ஆனால் தேர்தல் நடத்தாமலேயே சட்டவிரோதமாக வேறொருவர்  தேர்ந்தெடுக்கப்பட்டதாக மனுவில் தெரிவித்துள்ளார்.  

இதேபோல் தமிழகம் முழுவதும் 95% கூட்டுறவு சங்கங்களுக்கு முறையான தேர்தல் நடத்தாமல் கடந்த அதிமுக ஆட்சியில் சேர்ந்த நிர்வாகிகளே தன்னிச்சையாக தேர்வு செய்யப்பட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூட்டுறவு சங்கங்களில் சுமார் 9 ஆயிரம் கோடி அளவிற்கு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கடன் மோசடி நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் ஆளுங்கட்சியின் நிர்வாகிகளே தலைவராக இருப்பதனால் தங்களுடைய பினாமிகளுக்கு கடன் அளித்துள்ளதாகவும், இதனால் அவர்கள் தான் அதிக பலன் அடைந்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். 

மேலும் தற்போது தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடி 11,500 கோடி ரூபாயில் அதிமுகவை சேர்ந்தவர்களே பயன்பெற்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே இதுகுறித்து உரிய விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து தமிழக அரசு உரிய விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.
 

click me!