
டெங்கு காய்ச்சல் பாதிப்பு
டெங்கு காய்ச்சல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று டெங்கு பற்றிய அறிக்கையில் "டெங்கு போன்ற விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருவதாக செய்திகள் வருகின்றன" என்று குற்றம்சாட்டுவதில் கூட ஆருடம் கூறுவதைப்போல் குழப்பநிலையில் உள்ளார்.
அடுத்ததாக ஜெயலலிதா ஆட்சியில் நடத்தியதைப்போல முகாம்கள் நடத்த வேண்டும் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. மருத்துவத்துறை வரலாற்றிலேயே இல்லாத வகையில் 29.10.2023 தொடங்கி 30.12.2023 வரை மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் 10 அறிவிக்கப்பட்டு வாரத்திற்கு 1000 முகாம்கள் என்று இலக்கு அறிவிக்கப்பட்டதில்,
அதிமுக ஆட்சியில் பாதிப்பு அதிகம்
இலக்கை மிஞ்சிய சாதனையாக இதுவரை நடைபெற்ற 5 வார மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களில் 5000 முகாம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் 10.576 முகாம்கள் நடைபெற்று உள்ளது. அதில் 5,21.853 பேர் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர். இது தெரியாமல் புரியாமல் யாரோ எழுதிக் கொடுத்ததை வருகிற நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மருத்துவத்துறையில் அரசியல் செய்ய பார்க்கிறார். இதில் என்ன வேடிக்கை என்றால் ஜெயலலிதா ஆட்சியில் 2012ஆம் ஆண்டு உச்சக்கட்ட டெங்கு பாதிப்பு 13,204 பேர் பாதிக்கப்பட்டு 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து அதிகமாக டெங்கு பாதிப்பு 2017 ஆம் ஆண்டு தவழ்ந்து வந்து ஆட்சியை பிடித்த எடப்பாடி ஆட்சிக்காலத்தில் பாதிப்புகள் 23,294, இறப்பு 65. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மருத்துவத்துறை ஜனவரி 2023 முதல் இதுவரை 3,57,612 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஜனவரி முதல் இதுவரை 7133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேங்கிய தண்ணீர் அகற்றம்
இதில் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 537 பேர், 10 பேர் இறந்துள்ளனர் என்று நாள்தோறும் என்னுடைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து வருகிறேன். திராவிட மாடல் அரசின் நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி உள்ளதை உள்ளபடி அரசியல் செய்யவோ அரசை நடத்தவோ தெரிந்தவர்கள் நாங்கள் குனியவோ, குழையவோ. தவழவோ தெரியாதவர்கள் பழகாதவர்கள் நாங்கள்.
மருத்துவத்துறை, உள்ளாட்சித்துறை இணைந்து தேங்கி உள்ள தண்ணீரை அகற்றி டெங்கு பரவலை தடுக்க வேண்டும் என்கிறார் எடப்பாடி. 2021 திமுக ஆட்சி அமைந்த பிறகு பெருநகர சென்னை மாநகராட்சியில் மட்டும் 862.56 கிமீ ரூ.2.899.09 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன மற்றும் 369.60 கி.மீ நீளத்திற்கு ரூ.1894.59 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்
கோயபல்ஸ் எடப்பாடி
தொடர் மழை பெய்து ஏரி, குளம் நிரம்புகிறதே தவிர சாலையில் ஒரு சொட்டு நீர் தேங்குவதில்லை. இதை அறியாமல் எடப்பாடி அவர்கள் ஒரு பொய்யை உணர்வுபூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸ் மிஞ்சிய ஆள் இல்லை என்பார்கள். அதைப்போல ஏமாற்றுப்பேர்வழிகளின் தந்தை கோயபல்ஸ் போல் காட்சித்தருகிறார்.
அவர் நிலையை மாற்றி கொள்ள வேண்டும். ஓட்டு அரசியலுக்காக பல இலட்சம் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் மருத்துவமனைகள் மீதும், சேவைபுரியும் மருத்துவத்துறை மீதும் காழ்ப்புணர்ச்சி அரசியலை இனிவரும் காலங்களில் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
சென்னையில் 93,000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி! தினமும் 910 தடுப்பூசி போட 7 மருத்துவக் குழுக்கள்!