திமுகவுடன் சேர்ந்து பணியாற்ற அதிமுக தயார்... அவுங்க தயாரா..? திமுகவுக்கு மாஃபா பாண்டியராஜன் கேள்வி!

By Asianet TamilFirst Published Jun 29, 2020, 9:13 PM IST
Highlights

90 நாட்களில் 50 அறிக்கைகள் ஸ்டாலின் வெளியிட்டு இருப்பது கின்னஸ் சாதனையாக இருக்கலாம். கொரோனா விவகாரத்தில் மொத்தம் எண்ணிக்கையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை எதிர்கட்சியினர் மறைத்து பேசுகிறார்கள். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல்.

கொரோனா விவகாரத்தில் திமுகவுடன் இணைந்து செயல்படுவதில் எந்தத் தயக்கமும் எங்களுக்கு இல்லை என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். “90 நாட்களில் 50 அறிக்கைகள் ஸ்டாலின் வெளியிட்டு இருப்பது கின்னஸ் சாதனையாக இருக்கலாம். கொரோனா விவகாரத்தில் மொத்தம் எண்ணிக்கையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை எதிர்கட்சியினர் மறைத்து பேசுகிறார்கள். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல். கொரோனா விவகாரத்தில் திமுகவுடன் இணைந்து செயல்படுவதில் எந்தத் தயக்கமும் எங்களுக்கு இல்லை. ஆனால், அவர்கள்தான் வரவில்லை. அமைச்சர்களுடன் இணைந்து நீங்களும் களத்தில் இறங்கி பணிபுரியலாம். எந்த திமுகவினரும் தன்னார்வலராக முன்வந்தால், அவர்களை நாங்கள் புறக்கணிக்கமாட்டோம்.
திமுக தலைவர் இரண்டு விதமாக மு.க.ஸ்டாலின் அறிக்கையை வெளியிடுகிறார். அதாவது, முதல்வர் செய்ய இருப்பதை, அதற்கு முதல் நாள்தான் மு.க.ஸ்டாலின் அறிக்கையாக வெளியிடுகிறார் அல்லது செய்யவே முடியாத ஒன்றை அறிக்கையாக வெளியிடுவார். பரிசோதனையில் ஏற்கனவே தொற்று இருப்பவர்களைதான் கண்டறிந்துவருகிறோம். புதிதாக தொற்று ஏதும் உருவாகவில்லை. அதேவேளையில் அரசு எவ்வளவு முயற்சி எடுத்தும் தொற்று குறையவில்லை என்று பேசப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது உண்மையும் இல்லை. தண்டையார்பேட்டை மண்டலத்தில் இதுவரை 70 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்” என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

click me!