மெயின் ரோட்டில் எல்லாம் பதில் சொல்லியிருக்கிறோம்... அமைச்சர் ஜெயக்குமாருக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

By Asianet TamilFirst Published Jun 29, 2020, 8:50 PM IST
Highlights

"இ-பாஸை காட்டியபிறகே மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தனர். ஆனால், என் சாத்தான்குளம் பயணத்தை பேசுபொருளாக்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்பி, கொலையாளிகளை தப்பவைக்க அரசு திட்டமிடுவதாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

இ-பாஸ் பெறமால் தூத்துக்குடிக்கு உதயநிதி ஸ்டாலின் சென்றதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ள நிலையில், ‘மெயின் ரோடு’ செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீசாருக்கு பதிலளித்துள்ளோம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீஸார் கைது செய்தனர். இருவரையும் விசாரணைக்குப் பிறகு நீதிபதியிடம் ஆஜப்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர்.  இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விசாரணையில் போலீஸார் இருவரையும் கடுமையாக தாக்கியதே அவர்கள் உயிரிழக்க காரணம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.


இந்நிலையில் தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி, நேரடியாக ஜெயராஜ் வீட்டுக்கு வந்து, ஆறுதல் கூறி, அவரிடம் திமுக அறிவித்த 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தூத்துக்குடிக்கு சென்று ஜெயராஜ் - பெனிக்ஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெறாமல் தூத்துக்குடிக்கு சென்றதாக அமைச்சர் ஜெயக்குமார் புகார் கூறினார். இதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.


இந்தக் குற்றச்சாட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் மூலம் பதில் அளித்துள்ளார். அதில், “‘மெயின் ரோடு’ செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீசாருக்கு பதிலளித்துள்ளோம். இ-பாஸை காட்டியபிறகே மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தனர். ஆனால், என் சாத்தான்குளம் பயணத்தை பேசுபொருளாக்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்பி, கொலையாளிகளை தப்பவைக்க அரசு திட்டமிடுவதாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

click me!