
அதிமுகவைவிட திமுக வலுவான கட்சி என்பதை மறைமுகமாக அமைச்சர் ஜெயக்குமார் ஒப்புக்கொள்கிறாரா என்ற கேள்வி, அவரது பேட்டியின் மூலம் எழுகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுகவை வீழ்த்தி சுயேட்சையாக களமிறங்கிய தினகரன் அபார வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் ஓட்டுக்கு 6000 ரூபாய் வழங்கியதாகவும் தினகரன் சார்பில் 10000 ரூபாய் தருவதாக கூறி 20 ரூபாய் டோக்கன் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
ஆர்.கே.நகரில் தினகரனின் வெற்றியை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பணநாயகம் வென்றுவிட்டதாக விமர்சித்து வருகின்றனர். ஹவாலா முறையில் பணப்பட்டுவாடா செய்த தினகரன் வெற்றி பெற்றதாகவும் ஜனநாயகம் சீரழிந்து வருவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
திமுகவின் திருமங்கலம் ஃபார்முலா மாதிரி, இது தினகரனின் ஹவாலா ஃபார்முலா என பாஜக விமர்சிக்கிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு தொடர்பாக இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்துவந்த கமல்ஹாசன், வார இதழ் ஒன்றுக்கு எழுதும் தொடரில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து விமர்சித்து எழுதியுள்ளார். அதில், ஆர்.கே.நகரில் ஆளும் தரப்பும் சுயேட்சை தரப்பும் போட்டி போட்டு கொண்டு வாக்காளர்களின் தலைக்கு விலை நிர்ணயம் செய்தனர். அதில், அதிகவிலை நிர்ணயித்த சுயேட்சை வெற்றி பெற்றுவிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணத்தால் வாங்கப்பட்ட வெற்றி. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒரு ஆகப்பெரிய ஜனநாயக அசிங்கம் என கமல் விமர்சித்து எழுதியிருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக அரசை கமல் விமர்சிப்பதாகவும் அவருக்கு தைரியம் இருந்தால் திமுகவையோ தினகரனையோ விமர்சிக்கட்டும் எனவும் பேசினார்.
அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பேச்சு, சில கேள்விகளை எழுப்புகின்றன. தைரியம் இருந்தால் திமுகவை விமர்சிக்கட்டும் என அமைச்சர் கூறியிருக்கிறார். அப்படியென்றால், அதிமுகவை விமர்சிக்க தைரியம் தேவையில்லை. அதிமுகவை எளிதில் விமர்சித்துவிட முடியும். திமுகவை விமர்சிப்பது கடினம் என அவரே கூறுவதாக இந்த கருத்து அமைந்துள்ளது. போகிற போக்கில் அதிமுகவை விமர்சித்துவிட முடியும். ஆனால் திமுகவை முடியாது என்கிறாரா அமைச்சர்? என்ற கேள்வி எழுகிறது.
இதன்மூலம் அதிமுகவைவிட திமுக வலுவானது மற்றும் எதிர்ப்புகளை வலுவாக எதிர்கொள்ளும் திறமை வாய்ந்தது என்று மறைமுகமாக அமைச்சர் உள்ளடக்கியுள்ளாரா என்ற சந்தேகத்தை அரசியல் நோக்கர்கள் எழுப்புகின்றனர்.