
பாஜக கூட்டணிக்கு திமுக தயார் என்று கூறிவிட்டால், ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி அவரது ரசிகர்களால் கடந்த 1996 ஆம் ஆண்டில் இருந்து எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக டிசம்பர் 31 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், தமிழ்நாட்டு அரசியல் மிகவும் மோசமாகி விட்டது என்றும் தமிழக அரசியலைக் கண்டு மற்ற மாநிலத்தார் சிரிப்பதாகவும் கூறினார். தனது அரசியல், ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் நேர்மையான தர்மமான அரசியல் என்று அர்த்தம் என்றும் ரஜினி கூறியிருந்தார். ரஜினியின் அரசியல் பிவேசம் குறித்து, அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும், திரைப்பட துறையினரும், அரசியல் கட்சி
தலைவர்களும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினியின் அரசியலால் பயனடையப்போவது பாஜகதான் என்றும், ரஜினியை வைத்து அதிமுகவின் வாக்கு வங்கியை உடைத்து, திராவிட கட்சி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம்தான் தமிழகத்தில் காலூன்ற முடியும் என்று பாஜக நினைப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பொது செயலாளர் ரவிக்குமார் கூறுகிறார்.
ரவிக்குமாரிடம், வார இதழ் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. ரஜினியின் அரசியலை தமிழிசை சௌந்தரராஜன், குருமூர்த்தி போன்றவர்கள் வரவேற்றுள்ளனர் என்றும், இந்து விரோத ஆங்கிலோய அடிவருடிகள் திராவிட கட்சிகள் என்று ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ரவிக்குமார், இவர்களுக்கு பிரச்சனை திமுகவோ, அதிமுகவோ கிடையாது. இந்த இரு கட்சிகளுடனும், இவர்கள் கூட்டணி வைத்தவர்கள்தான். இன்றைக்கும் கூட திமுக ஒப்புக்கொண்டு விட்டால், அவர்களுடன் ஒட்டி உறவாட பாஜக தயாராக இருக்கிறது என்றார்.
அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் கருணாநிதியை தேடிச் சென்று பார்த்தார். இந்தியாவிலேயே தனித்துவம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இவர்கள் திராவிட அரசிய்ல என்று சொல்லி திமுக, அதிமுகவை மட்டும் காட்டி, திராவிட அரசியல் முன் வைத்த சமூக நீதி என்ற கொள்கையை வீழ்த்தப் பார்க்கிறார்கள் என்றும் அதனை குழித்தோண்டி புதைத்துவிட கனவு காண்கிறார்கள் என்றும் கூறினார்.
அதனால்தான், ரஜினியை களமிறக்கி விட்டிருக்கிறார்கள். இப்போதும்கூட உறுதியாக சொல்கிறேன். பாஜக கூட்டணிக்கு திமுக தயார் என்று கூறிவிட்டால், ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள் என ரவிக்குமார் அதிரடியாக பதிலளித்தார்.