
மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காதது ஏன் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2017 -2018ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு செயல் வடிவம் பெற்றுவிட்டதாகவும் ஆனால் அதற்கு முன்பே 2015 -2016ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் அமைக்கப்படாமல் இருப்பதற்கு மத்திய, மாநில அரசுகளின் மெத்தன போக்குதான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் உள்ள செங்கிபட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை நகரம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செங்கல்பட்டு உள்ளிட்ட ஐந்து இடங்களை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஏற்ற இடங்களாகத் தேர்வு செய்து, மாநில அரசு மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறது.
இந்த ஐந்து இடங்களிலும் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியிலிருந்து 25 ஆம் தேதி வரை மத்திய குழு வந்து, ஆய்வும் செய்து விட்டுத் திரும்பிவிட்டது. அதன்பிறகு, தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு அருகில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு மாநிலத்தில் உள்ள அதிமுக அரசு உடனடியாக விவரங்களை வழங்காமல் தாமதம் செய்தது.
2017 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திலேயே நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுவிட்டது.
ஆனால், இன்றுவரை தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதற்கான இடத்தை மத்திய - மாநில அரசுகள் இறுதி செய்யவில்லை.
எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைப்பதற்கு உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.