இப்படியெல்லாம் கொச்சைப்படுத்தாதீங்க... கொந்தளித்த அமைச்சர் கீதா ஜீவன்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 27, 2021, 07:52 PM IST
இப்படியெல்லாம் கொச்சைப்படுத்தாதீங்க... கொந்தளித்த அமைச்சர் கீதா ஜீவன்...!

சுருக்கம்

குழந்தைகளைக் காப்பாற்றி, கரை தூக்கிவிட வேண்டும் என்று கருணை உள்ளத்தில் உருவான திட்டம் என்பதை மறந்து, முதல்வரின் சீரிய சிந்தனையில் உருவான இந்த சிறப்புமிகு திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தவறான செய்திகளை வெளியிட்டு மக்களின் மத்தியில் வீணான குழப்பதை ஏற்படுத்த வேண்டாம் என அமைச்சர் கீதா ஜீவன் எச்சரித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்காக தாய் உள்ளத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிதியுதவி திட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என அமைச்சர் கீதா ஜீவன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எந்த மாநிலத்திலும் அறிவிக்கப்படாத சிறப்புத் திட்டத்தினை தமிழகத்தில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக அறிவித்தார்.

கொரோனா நோய்த் தொற்றால் இரண்டு பெற்றோர்களையும் இழந்த மற்றும் தாயையோ அல்லது தந்தையையோ இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் நலன் காப்பதற்காக மே 29 அன்று தாயுள்ளத்தோடு அறிவித்த இந்தத் திட்டத்தினைப் பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்த்தது.  இத்திட்டத்தின் கீழ் இரண்டு பெற்றோரை இழந்த 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் அக்குழந்தையின் பெயரின் வைப்புத் தொகையாக தமிழ்நாடு பவர் கார்ப்பரேஷனில் செலுத்தப்படும்.

அக்குழந்தைகளுக்கு கல்லூரிப் படிப்பு வரை படிப்பதற்கான கல்விச் செலவை அரசே ஏற்றுக் கொள்வதோடு, மாதாந்திர பராமரிப்புத் தொகையாக ரூபாய் 3,000 வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசு இல்லத்தில் அல்லது அரசு உதவி பெறும் இல்லத்தில் தங்கியிருக்க விரும்பினால், அதற்கும் ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டத்தின் கீழான பயனாளிகள் தேர்வு குறித்த வழிகாட்டு விதிமுறைகளும் வழங்கப்பட்டு, அதில் இரண்டு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு வருமான வரம்பு அறவே கிடையாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, பெற்றோர் ஒருவரை இழந்து தற்போது கொரோனாவினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த ஆதரவற்ற குழந்தைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோரில் ஒருவர் கொரோனா தொற்றினால் இறந்திருந்தால் 18 வயதுக்குட்பட்ட வறுமைக் கோட்டுப் பட்டியலிலுள்ள குடும்பக் குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையான 3 லட்சம் ரூபாய் அரசால் வழங்கப்படும் என்றும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் பராமரிக்கப்பட்டு வரும் வறுமைக் கோட்டுப் பட்டியலில் ஒருவேளை ஏழை, எளிய மக்களின் பெயர் விடுபட்டிருந்தால், மாவட்ட ஆட்சியர் மேற்படி குடும்பத்தை உடனடியாக அப்பட்டியலில் சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசாணையிலேயே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வளவு மகத்தான மக்கள் நலத் திட்டத்தை ஜூன் 16 அன்று முதல்வர் தொடங்கி வைத்து, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் பயன்களையும் வழங்கியிருக்கிறார். அதே நேரத்தில், ஆதரவற்ற குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு, இன்று வரை இரண்டு பெற்றோர்களையும் இழந்த பிரிவில் 92 குழந்தைகளும், பெற்றோரில் ஒருவரை இழந்த பிரிவில் 3,409 குழந்தைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எந்த ஒரு திட்டத்திலும் வயது வரம்பு, வருமான வரம்பு என்பது மிக முக்கியமான வரையறைகள்தான் என்பது ஒருபுறமிருக்க, இத்திட்டத்தைப் பொறுத்தவரை 18 வயதுக்கு உட்பட்டவர்களே குழந்தைகள் என்று தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. 
இந்த சிறப்புத் திட்டத்தின் வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் அனைத்தும் கொரோனாவில் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளைக் காப்பாற்றி, கரை தூக்கிவிட வேண்டும் என்று கருணை உள்ளத்தில் உருவான திட்டம் என்பதை மறந்து, முதல்வரின் சீரிய சிந்தனையில் உருவான இந்த சிறப்புமிகு திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தவறான செய்திகளை வெளியிட்டு மக்களின் மத்தியில் வீணான குழப்பதை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு