
DuraiMurugan hand injured : துரைமுருகன், தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராகவும், திமுக மூத்த தலைவராகவும், தற்போது கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். துரைமுருகனின் அரசியல் பயணம் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. 1971இல் முதன்முதலாக காட்பாடி தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு 10 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்று, தமிழ்நாடு அரசியலில் முக்கிய பங்காற்றியுள்ளார். திமுக ஆட்சியில் பலமுறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். தற்போது நீர்வளத்துறை அமைச்சராக உள்ளார். கட்சி மற்றும் அரசு பணியில் சுறு சுறுப்பாக பங்கேற்று வருகிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக உடல் நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இதனை தொடர்ந்து அரசு பணியை மேற்கொண்டு வந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வீட்டில் தவறி கீழே வழுக்கி விழுந்துள்ளார். இதனால் கையில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
கையில் லேசான காயம் காரணமாக கட்டு போடப்பட்டுள்ளது. இதனையடுத்து சுதந்திர தின விழா நிகழ்விலும் துரைமுருகன் கலந்து கொள்ளவில்லை. தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வரும் அமைச்சர் துரைமுருகனை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து உடல் நிலை தொடர்பாக கேட்டறிந்தார். கையில் கட்டோடு அமைச்சர் துரைமுருகன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.