
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும். அதே நாளில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21. ஆகஸ்ட் 25 வரை பெயரை திரும்பப் பெறலாம். மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்கத்தில், உடல்நலக் காரணங்களைக் கூறி, ஜூலை 21 ஆம் தேதி இரவு ஜக்தீப் தன்கர் திடீரென நாட்டின் துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். ஜக்தீப் தன்கரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10, 2027 வரை இருந்தது.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற என்.டி.ஏ தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்ய அங்கீகரிக்கப்பட்டனர். அதன் பிறகு பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களிடையே தொடர் கூட்டங்கள் நடந்து வருகின்றன. அதில், வேட்பாளர்களின் பெயர்கள் விவாதிக்கப்படுகின்றன.
துணை ஜனாதிபதி பதவிக்கு என்.டி.ஏ வேட்பாளர் யார் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. ஆனாலும், பாஜகவின் முந்தைய சில முடிவுகளைப் பார்த்தால், பெரும் ஆச்சரியங்கள் நிகழ்ந்தன. இந்த முறையும் பாஜக ஆச்சரியத்தைத் தருமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பல மாநிலங்களின் ஆளுநர்களுடன், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களின் பெயர்களும் அடிபடுகிறது. 2017 ஆம் ஆண்டில், நரேந்திர மோடி அரசில் கேபினட் அமைச்சரான வெங்கையா நாயுடுவை பாஜக துணை ஜனாதிபதியாக ஆக்கியது. அதன் பிறகு ஜக்தீப் தன்கர் இந்தப் பதவியில் பொறுப்பேற்றார்.
ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்த விதம் பாஜகவுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், மீண்டும் அப்படியொரு நிலை ஏற்படுவதை பாஜக தலைமை விரும்பவில்லை. இப்போது எச்சரிக்கையுடன் நடந்து வருகிறது. இந்த நிலையில், இப்போது பாஜக கட்சியில் உள்ளவரையோ, அரசில் அங்கங்கம் வகித்த அனுபவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவரை மட்டுமே துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும். குஜராத், கர்நாடகா, சிக்கிம், பீகார் ஆளுநர்களில் ஒருவருக்கு வாய்ப்பளிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேவேளை ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு போதுமான எண்ணிக்கை உள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் வாக்களிக்கின்றனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் மொத்தம் 788 உறுப்பினர்கள் (தற்போது 782 உறுப்பினர்கள்) தேர்தல் வாக்களிக்க உள்ளனர். அனைத்து வாக்காளர்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களாக இருப்பதால், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பும் ஒரே மாதிரியாக இருக்கும்.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களோடு, நியமன உறுப்பினர்களும் வாக்களிக்கலாம். இதில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சுமார் 425 உறுப்பினர்களின் ஆதரவுடன் முன்னிலை வகிக்கிறது. இந்திய கூட்டணிக்கு 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஆளும் அல்லது எதிர்க்கட்சியாக இருந்தாலும், எந்த கூட்டணியிலும் இல்லாத 18 உறுப்பினர்கள் ராஜ்யசபாவில் உள்ளனர். இவற்றில் பிஜேடி, ஒய்எஸ்ஆர்சிபி மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி ஆகியவை அடங்கும். பாஜகவின் பலத்தை மட்டும் பார்த்தால், பாஜகவுக்கு மக்களவையில் 240 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 102 உறுப்பினர்களும் உள்ளனர்.
மறுபுறம், காங்கிரசுக்கு மக்களவையில் 99 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 27 எம்.பி.க்களும் உள்ளனர். இதுவரை, துணை ஜனாதிபதி பதவிக்கு 16 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. நான்கு முறை மட்டுமே வேட்பாளர் போட்டியின்றி வெற்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் இரண்டு தேர்தல்களில் பலமுனைப் போட்டி காணப்பட்டது.
துணை ஜனாதிபதித் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை நியமிக்கும் போது பலம் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்து முதலமைச்சர்களும், துணை முதலமைச்சர்களும் கலந்து கொள்வார்கள். முக்கிய கூட்டணிக் கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள்.
2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த முதல் துணை ஜனாதிபதித் தேர்தலில், காங்கிரஸும், எதிர்க்கட்சிகளும் கோபால கிருஷ்ண காந்தியை தங்கள் வேட்பாளராக நிறுத்தியிருந்தன. 2017 ஆம் ஆண்டு, அவர் பாஜகவின் வெங்கையா நாயுடுவை எதிர்த்துப் போட்டியிட்டார். 2022 ஆம் ஆண்டு, பாஜக வேட்பாளர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக மார்கரெட் ஆல்வாவை காங்கிரஸ் நிறுத்தியது.