அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசியலை விட்டு ஓய்வு பெற வேண்டும் - தமாகா இளைஞரணித் தலைவர் அறிவுரை...

First Published Nov 17, 2017, 9:05 AM IST
Highlights
Minister Dindigul Srinivasan should resign from politics - Dhamaka Youth Leaders Advisory ...


கரூர்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசியலைவிட்டு ஓய்வு பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா அறிவுரை வழங்கியுள்ளார்.

கரூரில் தமிழ் மாநில காங்கிரசு இளைஞரணி மண்டல நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா செய்தியாளர்களிடம் கூறியது:

"அரசின் திட்டங்களை தமிழக ஆளுநர் ஆய்வு செய்வதற்கு அனைத்துக் கட்சிகளும்  எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
 
அரசு சாராயக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து ஜெயலலிதா முதல்வரானார். ஆனால், தற்போது 967 புதிய சாராயக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்.  

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு சேர வேண்டிய மத்திய அரசின் ரூ.29000 கோடி நிதியும் கிடைக்கவில்லை. எனவே, உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்.  

இராமேசுவரம் மீனவர்கள் மீது  இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது கண்டனத்துக்கு உரியது.

தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டுக்கு அரசுதான் காரணம். ஒரு யூனிட் மணல் ரூ.12,000 வரை விற்கப்படுவதால் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.  மலேசியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை குறைந்த விலையில் விற்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 11 இடங்களில் பேருந்து நிலையங்கள் இடியும் நிலையில் உள்ளன. அதில், கரூர் பேருந்து நிலையமும்  ஒன்று. இவற்றை சீரமைக்க வேண்டும்.

விவசாய பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்.

ஆளுநரின் ஆய்வு குறித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு கண்டனத்துக்கு உரியது. அவர் அரசியலை விட்டு ஓய்வுபெற வேண்டும்" என்று அவர் கூறினார்.

இந்தப் பேட்டியின்போது  கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் கார்த்திக், அபிராமி, அருண்பிரசாத், செயலாளர் சத்யா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

tags
click me!