
பெண்களின்ள அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நாப்கின்னுக்கு ஜிஎஸ்டி வரி விதித்தது ஏன் என டெல்லி உயர்நிதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் கடந்த ஜுலை 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல் படுத்தப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டியால் சிறு-குறு வணிகர்கள், ஜவுளித்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டள்ளனர். இதையடுத்து 213 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த ஜிஎஸ்டியில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் இடம்பெறுள்ளன. இதற்கு வரிவிதிக்கப்பட்டுள்ளதால் நாப்கின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் நாப்கினுக்கு வரி விதிக்கப்பட்டதற்கு பெண்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கீதா மிட்டல், ஹரி ஷங்கர் ஆகியோர் , சிந்தூர் போன்ற அழகு சாதன பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவசியமான ஒன்றாக கருதப்படும் நாப்கினுக்கு வரி விதிக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினர்.
ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு முன்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் ஆலோசனை நடத்தப்பட்டதா? என பல கேள்விகளால் மத்திய அரசு வழக்கறிஞரை துளைத்தெடுத்த நீதிபதிகள் , இதுகுறித்து இன்னும் ஒரு மாதத்துக்குள் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.