12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தயார்... அமைச்சர் அன்பில் மகேஷ் வெளிட்ட அசத்தல் அறிவிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 15, 2021, 8:00 PM IST
Highlights

மதிப்பெண் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

​தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும்,  மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இதையடுத்து பிளஸ் 2 மாணவர்கள் உயர் கல்வி வகுப்பில் சேர்வதற்கு மதிப்பெண்கள் தேவைப்பட்டு வந்தது. தேர்வு நடைபெறாத நிலையில் மதிப்பெண் எவ்வாறு வழங்குவது என்று கல்வித்துறை குழம்பி வந்தது.

இதையடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக கல்வியாளர்கள், கல்வித்துறை அதிகாரிகளுடன் பல கட்ட ஆலோசனைகளை நடத்திய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும் என்ற விவரத்தை வெளியிட்டார். அதன்படி, +2 மாணவர்கள், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் 50% (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள்), 11 ஆம் வகுப்பு மதிப்பெண் 20% மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண் 30% கணக்கிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 

மேலும் கொரோனா அச்சம் காரணமாக பிளஸ் 2 செய்முறை தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு பிளஸ் 1 செய்முறை தேர்வுகளின் மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 ஆம் வகுப்பில் செய்முறை தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பின் எழுத்து தேர்வில் இருந்து மதிப்பெண்கள் எடுக்கப்படும் என்றும்,  பிளஸ் 1 வகுப்பு எழுத்து தேர்வில் ஏதேனும் பாடத்தில் மாணவர்கள் தோல்வி அடைந்திருந்தால் அவர்களுக்கு 35 மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மதிப்பெண் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இன்று சென்னை எழிலகத்தில் நடந்த மாநில வளர்ச்சிக்குழு கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஏற்கனவே கூறியபடி இம்மாத இறுதிக்குள் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் எனக்கூறினார். தேர்வு முடிவுகள் அனைத்தும் ரெடியாக தான் உள்ளது. முதலமைச்சர் தேதி சொன்னவுடன் முடிவுகள் வெளியாகும். நாளை மாலை நடக்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டத்திற்கு பின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். 
 

click me!