தமிழ்நாட்டை 12 மண்டலங்களாக பிரித்து திட்டங்களை உருவாக்குங்கள்... முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 15, 2021, 7:41 PM IST
Highlights

"முக்கிய நகரங்களில் வளர்ச்சிக் குழுமங்களை ஏற்படுத்தி, நகரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு நீண்டகாலத் தேவைகளுக்கான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்திட வேண்டும்” என  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் செயல்பாடுகள் குறித்தும், துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், புதிதாகச் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி,  ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர்இறையன்பு, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் ஹிதேஸ்குமார் எஸ். மக்வானா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் சுன்சோங்கம் ஜடக் சிரு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


இதுகுறித்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: உள்ளாட்சி அமைப்புகள் அதற்குரிய எல்லைப்பகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதால், வளர்ந்துவரும் தேவைகளுக்கேற்ப முக்கிய நகரங்களில் வளர்ச்சிக் குழுமங்களை ஏற்படுத்தி, நகரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு நீண்டகாலத் தேவைகளைக் கருத்திற்கொண்டு முறையாகத் திட்டமிட்டு, உட்கட்டமைப்புகளை ஏற்படுத்திட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

நகர் ஊரமைப்பு இயக்ககம், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் திட்ட அனுமதி, கட்டட அனுமதி ஆகியவற்றை வெளிப்படைத்தன்மையுடன் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் வழங்கிட கால புதிய சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் உடனடி விண்ணப்பப் பதிவு சுயச்சான்று அடிப்படையில், உரிய காலத்திற்குள் ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு முழுவதையும், 12 மண்டலங்களாகப் பிரித்து மண்டல திட்டங்கள் உருவாக்கவும், மற்றும் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி போன்ற 22 நகராட்சிகளுக்குப் புதிய முழுமைத் திட்டங்கள் தயாரிப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய மாண்புமிகு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டுதாரர்களுக்கு விற்பனைப் பத்திரங்கள் சென்றடையும் வகையில் நாளிதழ்களில் விளம்பரம் செய்து  விரைவாக வழங்க நடவடிக்கை எடுத்தல், தற்போது குடியிருப்போருக்காக விற்பனைப் பத்திரம் வழங்குவதற்கு சமரச திட்டம் வகுத்தல் மற்றும் விற்பனை ஆகாத குடியிருப்புகளுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்வதற்கான வழிமுறையை வகுத்தல் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

தனிப்பட்ட துணை நகரியங்களுக்குப் பதிலாகத் தொழில், சுகாதாரம், நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, கல்வி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைகள் மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஆகியவற்றின் பங்களிப்புடன் ஒருங்கிணைந்த வளர்ச்சி மையங்களை உருவாக்குதல் குறித்து பரிசீலிக்க அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் திறனுக்கேற்ற வீட்டுவசதி திட்டத்தின் கீழ், பயனாளிகள் பங்களிப்புத் தொகை செலுத்துவதை எளிமைப்படுத்தி பயனாளிகளுக்கு வீட்டுவசதிக் கடன் வழங்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் ஆலோசித்து முத்தரப்பு ஒப்பந்தம் மூலமாக அவர்களுக்குக் கடன் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும், பிரிக்கப்படாத நிலப்பாகங்களுக்காகப் பயனாளிகளுக்கு நிபந்தனைகளுடன் கூடிய விற்பனைப் பத்திரங்களை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்திடலாம் என்றும்  முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் அங்காடி நிர்வாகக் குழு அமைக்கவும், வணிகவளாகச் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பினை நவீனப்படுத்தவும், பொது வசதிகளைக் கூடுதலாக ஏற்படுத்தவும், இயற்கை வேளாண்முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்திப் பொருள்களுக்குத் தனியாக விற்பனை அங்காடி தொடங்கவும், சென்னைப் பெருநகரப் பகுதியை மேலும் விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயும்படியும் முதலமைச்சர் அறிவுறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

click me!