+2 மார்க் சீட் எப்போது கிடைக்கும்?... பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 9, 2021, 7:16 PM IST
Highlights

 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு நடத்தினர். அதன் பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பொதுமக்களுக்கு மளிகை தொகுப்பினை வழங்கினர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இம்மாத இறுதிக்குள் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,  கொரோனா  தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு போதிய அளவில் கல்வி அளிக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படு வருவதாகவும்,  நிதி நிலை அறிக்கையில் கல்விக்காக பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கொரானா வைரஸ் தொற்றின் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால், தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஏற்கனவே அரசும் நீதிமன்றமும் தெளிவாக தெரிவித்துள்ளது என குறிப்பிட்ட அவர், அதையும் மீறி தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக ஆதாரப்பூர்வமான புகார்கள் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். 

பள்ளிகள் திறப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினருடன் கலந்தாலோசித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும்,  தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக் கூடாது என்பதில் தமிழக முதலமைச்சர் உறுதியாக இருப்பதாகவும், எனவே அதற்கேற்றார் போல் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்தார். 
 

click me!