எடப்பாடியாரை எரிச்சலடைய வைத்த தொண்டர்கள்... அதிமுக அலுவலக வாசலில் நடந்த தரமான சம்பவம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 09, 2021, 06:45 PM ISTUpdated : Jul 09, 2021, 07:01 PM IST
எடப்பாடியாரை எரிச்சலடைய வைத்த தொண்டர்கள்... அதிமுக அலுவலக வாசலில் நடந்த தரமான சம்பவம்...!

சுருக்கம்

ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக அவருடைய ஆதரவாளர்கள் ‘ஒற்றைத் தலைமை அய்யா ஓபிஎஸ்’ என முழக்கமிட்டனர். 

10 ஆண்டுகளாக தமிழக சிம்மானத்தில் இருந்த அதிமுக, கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியதை அடுத்து தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதன் முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட அக்கட்சியின் தலைமை முடிவெடுத்தது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளின் கூட்டம் இன்று நடந்தது.

இந்த கூட்டத்தில் 9 மாவட்டங்களுக்கு வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் என்ன என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. மேலும் அதிமுக தொண்டர்கள்  சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி வரும் ஆடியோ வெளியாவது தொடர்பாகவும், சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்தும் மாவட்ட செயலாளர்களுடன் தலைமை நிர்வாகிகள் ஆலோசனை நடத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 

மேலும் அதிமுக உருவாகி 50 ஆண்டுகள் தொடங்க உள்ளது. எனவே அக்டோபர் 17ம் தேதி அந்த நிகழ்வை சிறப்பாக கொண்டாட அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. எனவே ஒவ்வொரு மாவட்டங்களிலும் என்ன மாதிரியான கொண்டாட்டங்களுக்கு திட்டமிட வேண்டும் என்றும் ஆலோசனை நடத்தப்படும் என கூறப்பட்டது.  

இதற்காக அதிமுக தலைமை அலுவலகம் வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அங்குள்ள மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதற்கு முன்னதாக தலைமை அலுவலகம் வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக அவருடைய ஆதரவாளர்கள் ‘ஒற்றைத் தலைமை அய்யா ஓபிஎஸ்’ என முழக்கமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தது குறித்து சசிகலா விமர்சித்துள்ள நிலையில், தொண்டர்களின் இந்த முழக்கம் நிச்சயம் மேலும் சர்ச்சையை கூட்டியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

என்னை அந்த மாதிரி நினைக்காதீர்கள்.. நான் எந்த தவறும் செய்யவில்லை.. திருச்சி மக்களிடம் உருகிய கே.என்.நேரு!
பாஜக வெற்றி..! மதச்சார்பின்மையை நம்புபவர்களுக்கு கவலை அளிக்கிறது.. பினராயி விஜயன் கடும் வேதனை..!