நெல்லையில் பரபரப்பு.. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நள்ளிரவில் கைது.!

By vinoth kumarFirst Published Oct 10, 2021, 9:12 AM IST
Highlights

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 12வது ஒன்றிய கவுன்சில் பகுதியில் பாஜக நிர்வாகி பாஸ்கர் என்பவரை திமுக எம்.பி ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதை அடுத்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நெல்லை மக்களவை தொகுதி திமுக எம்.பி ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 12வது ஒன்றிய கவுன்சில் பகுதியில் பாஜக நிர்வாகி பாஸ்கர் என்பவரை திமுக எம்.பி ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதை அடுத்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பாஜக நிர்வாகி பாஸ்கரை முன்னாள் அமைச்சரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன். ராதாகிருஷ்ணன் அரசு மருத்துவமனைக்கு வந்து உடல் நலம் குறித்து விசாரித்ததோடு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவரிடம் பாஸ்கர் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். 

இதையடுத்து பாஸ்கரை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இரவு 10.30 மணிக்கு மேல் நெல்லை சந்திப்பில் உள்ள பாரதியார் சிலை முன்பு பொன்னார் தலைமையில் பாஜகவினர் திரண்டு திமுக எம்.பி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர். நள்ளிரவில் பாஜகவினர் போராட்டம் நடத்தியதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த உயரதிகாரிகள் பாஜகவினரோடு பேசினர். விடிவதற்குள் எம்.பி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பொன்னார் வலியுறுத்தினார். ஆனால், போலீசார் திமுக எம்.பி ஞானதிரவியம் உள்ளிட்டோர் மீது பணகுடி காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆனாலும் போராட்டம் தொடர்ந்ததால் நள்ளிரவில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

click me!