நாட்டையே உலுக்கிய லக்கிம்பூர் சம்பவம்…. மத்திய அமைச்சரின் மகன் நள்ளிரவில் கைது

By manimegalai aFirst Published Oct 10, 2021, 8:58 AM IST
Highlights

நாட்டையே உலுக்கிய லக்கிம்பூர் சம்பவத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு உள்ளார்.

லக்னோ: நாட்டையே உலுக்கிய லக்கிம்பூர் சம்பவத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு உள்ளார்.

உத்தரப்பிரதேத்தில் லக்கிம்பூரில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு விவசாயிகள் கறுப்பு கொடி காட்ட முயன்றனர்.

அந்த தருணத்தில் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆஷிஷ் மிஸ்ரா, விவசாயி ஒருவரை துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிகிறது.

இந்த சம்பவத்தில் கோபமுற்ற விவசாயிகள் வன்முறையில் இறங்க அங்கு கலவரம் வெடித்தது. தொடர்ந்த வன்முறை சம்பவத்தில் பத்திரிகையாளர் உள்பட மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் இந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் எழுப்பின.

வன்முறை சம்பவத்தின் நீட்சியாக ஆஷிஸ் மிஸ்ரா, ஆதரவாளர்கள் என மொத்தம் 14 பேர் மீது கொலை வழக்கு பதிவானது. இந் நிலையில் லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ராவிடம் உத்தரபிரதேச காவல்துறையினர் கிட்டத்தட்ட 12 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முக்கிய கட்டமாக நள்ளிரவில் மத்திய அமைச்சர் ஆஷிஷ மிஸ்ராவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அடுத்தக்கட்ட விசாரணையை நோக்கி போலீசார் நகர ஆரம்பித்துள்ளனர்.

click me!