எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... கருணாநிதி படம் இடம்பெறாதது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

By vinoth kumarFirst Published Oct 1, 2018, 1:16 PM IST
Highlights

எம்ஜிஆர் புகைப்பட கண்காட்சியில் கருணாநிதி படம் இடம்பெறாதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

எம்ஜிஆர் புகைப்பட கண்காட்சியில் கருணாநிதி படம் இடம்பெறாதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா பெரும் விமரிசையாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 31 மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. 

இதன் இறுதிவிழா நிகழ்வு சென்னையில் நேற்று நடந்தது. இதற்காக சென்னை முழுவதும் பேனர்கள், விளம்பரங்கள் என ஆச்சர்யப்படுத்தினார்கள் தமிழக அமைச்சர்கள். நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மதியம் 3:30 மணிக்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது. இதற்கான பிரமாண்ட மேடையில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். 

முன்னதாக, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பு புகைப்பட கண்காட்சியை அமைச்சர் ஜெயக்குமார் துவக்கிவைத்தார். இதில் எம்ஜிஆரின் நண்பரான கருணாநிதியின் புகைப்படம் எதுவுமே இடம்பெறவில்லை. இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: செம்மொழி மாநாட்டுக்கு தேவையின்றி 200 கோடி ரூபாய் செலவழித்த கட்சி திமுக., அதில் 10 சதவீதம் கூட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு செலவிடவில்லை. அவர்கள் செம்மொழி மாநாட்டுக்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்ற கணக்கு எங்களிடம் இருக்கிறது. 

நாங்கள் கொடுக்கிறோம். அந்த கணக்கை அவர்கள் நிச்சயமாக ஒத்துக் கொள்வார்கள். அதே போல எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு எவ்வளவு செலவு செய்தோம் என்ற கணக்கை வெளியிட தயார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியில் என்னென்ன புகைப்படங்கள் செய்தித்துறையில் இருக்கின்றதோ, அந்த புகைப்படங்கள் வைப்பது மட்டுமே வழக்கம். அப்படித் தான் இந்தக் கண்காட்சி வைக்கப்பட்டு இருக்கின்றது என்றார்.

click me!