#BREAKING ‘தனி சின்னத்தில் தான் போட்டி’... கெத்து காட்டும் மதிமுகவுடன் திமுக நிர்வாகிகள் அவசர ஆலோசனை...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 2, 2021, 1:08 PM IST
Highlights

மதிமுக - திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று தாயகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் அதே தேதியில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் தேதி வெளியானதால் அரசியல் கட்சி தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தையில் வேகமாக ஈடுபட்டுள்ளன. 

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டி.ஆர்.பாலு தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது திமுக.  திமுக கூட்டணியைப் பொறுத்தவரை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மல்லை சத்யா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நியமித்துள்ளார். அந்த குழு நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சமீபத்தில் திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு  7 சீட்டுகள் ஒதுக்கப்படலாம் என்றும், உதய சூரியன் சின்னத்தில் போட்டி என்றும் உத்தேச பட்டியல் வெளியானது. 

ஆனால் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மல்லை சத்யா தனி சின்னத்தில் தான் மதிமுக போட்டியிடும் என்பதை உறுதிபடுத்தினார். மதிமுக - திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று தாயகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உடன்  கேகேஎஸ்எஸ்ஆர் இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏஆர்ஆர் சீனிவாசன், விருதுநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் ராஜா அருள்மொழி  ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். தொகுதி பங்கீடு குறித்தும், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்தும் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

click me!