
இரட்டை இலை சின்னம் கிடைத்தும் அதை முழு மகிழ்ச்சியோடு கொண்டாட முடியவில்லை எடப்பாடி தரப்பால். காரணம், பன்னீர் அணியை சேர்ந்த மைத்ரேயன் சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் ‘ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அணிகள் இணைந்துவிட்டன ஆனால் மனம்?’ என்று கொளுத்திப் போட்ட விவகாரம் அந்த கட்சிக்குள் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இணைந்து 3 மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது வெற்றிகரமாக நமக்கு இரட்டை இலை கிடைத்திருக்கும் நேரமாய் பார்த்து அதில் மைத்ரேயன் கறுப்பு மை தடவிவிட்டாரே என்று கடுப்பாகின்றனர் அமைச்சர்கள். ‘இதுக்குதான் இவங்க சகவாசமே மறுபடியும் வேணாமுன்னு சொன்னோமுங்ணா. ஏதோ ஒரு பின்னணியிலதான் இந்த குசும்பெல்லாம் பண்றாங்கோ.’ என்று கொங்கு அமைச்சர் ஒருவர் முதல்வரிடம் குய்யோ முறையோ என குதித்திருக்கிறார்.
இந்நிலையில் மைத்ரேயன் போட்ட மை பத்தாது என்று, பன்னீரின் தீவிர விசுவாசியான மதுசூதனனும் தன் பங்குக்கு குண்டு வீசியிருக்கிறார். அவர் “எனக்கெல்லாம் இந்த கட்சியில எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. கட்சியல எல்லாரும் ஒத்துமையா இருக்கணுமுன்னு நினைச்சோம். வந்து சேர்ந்தோம். பன்னீர் சொன்னார் இணைந்தோம், பன்னீர் வழிகாட்டுதல் படி நடக்கிறோம். 1991-1996 வரை என்னை எம்.எல்.ஏ.வாக வைத்திருந்தார் ஜெயலலிதா. அதன் பிறகு டம்மியாக்கப்பட்டேன்.
அப்படிப்பட்ட எனக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பை தந்தது ஓ.பி.எஸ்.தான். அவர் எங்களை மதிக்கிறார். மற்றவர்கள் எங்களை மதித்தாலும், மதிக்காவிட்டாலும் அதுபற்றி கவலையில்லை.” என்று வெளிப்படையாக சொல்லியிருக்கும் மதுசூது, எடப்பாடி தங்கள் தலைவர் இல்லை என்பதை உள்ளந்தலையில் குட்டி சொல்லியிருக்கிறார்.