சீட் கொடுக்கலைன்னாலும் திமுகவுக்கு ஆதரவு !! மனித நேய மக்கள் கட்சி திடீர் அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Mar 10, 2019, 8:04 AM IST
Highlights

எதிர்வரும் நாடாளுமன்றத் தோதலில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு  முழு ஆதரவு அளிப்பது என மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. விழுப்புரத்தில் நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
 

ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் அதிமுக, திமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடது சாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகள் அனைத்திற்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தொடக்கம் முதல் திமுகவுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்தி வந்த மனித நேய மக்கள் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கட்சியினர், தினகரனை சந்தித்து கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியை மனித நேய மக்கள் கட்சி மறுத்துவிட்டது.

இந்நிலையில் விழுப்புரத்தில் மனித நேய மக்கள் கட்சியின்  செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது பல மணி நேரம் நீடித்த செயற்குழு கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, விவாதிக்கப்பட்டது.

கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, சீட் கொடுக்கவில்லை என்றாலும் , நாடாளுமன்ற தேர்தலில், திமுக  - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என முடிவு எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபடுவது என்றும் , இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வாய்ப்பு கேட்டு கோரிக்கை வைப்போம் என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

click me!