ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு... மணிப்பூர் எம்.எல்.ஏ. வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சபாநாயகருக்கு நெருக்கடி?

By Asianet TamilFirst Published Jan 24, 2020, 10:05 AM IST
Highlights

“மணிப்பூர் எம்.எல்.ஏ. ஒருவரின் தகுதிநீக்கம் குறித்து சபாநாயகர் 4 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் குறித்து ஏற்கனவே நிலுவையில் இருக்கும் விவகாரங்கள் குறித்து சபாநாயகர் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ளது. இந்தத் தீர்ப்பு மிகச் சரியானது."

மணிப்பூர் எம்.எல்.ஏ.வை கட்சித் தாவல் சட்டத்தில் தகுதி நீக்கம் செய்யும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்த நிலையில், தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

 
மணிப்பூரில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று பாஜகவில் சேர்ந்து அமைச்சரான ஷ்யாம் குமார் வழக்கில் உச்ச நீதிமன்றம் கடுமையான சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்காத சபாநாயகர், ஒரு மாதத்துக்குள் முடிவை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தனது உத்தரவில், “சபாநாயகர் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தராக இருக்கிறார். அப்படி இருக்கும்போது எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் அவரிடம் இருப்பது சரியாக இருக்குமா என்பதை நாடாளுமன்றம் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கை நேர்மையாக இருக்க வேண்டும்.


எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் முடிவை எடுக்கும் அதிகாரத்தை சபாநாயகரிடம் வழங்குவதற்கு பதிலாக சுதந்திரமான தனி அதிகாரம் உடைய ஓர் அமைப்பிடம் அதிகாரத்தை வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  தமிழகத்திலும் எடப்பாடி அரசுக்கு எதிராக கடந்த 2017-ல் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது. மணிப்பூர் எம்.எல்.ஏ. விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் அளித்த பேட்டியும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. “மணிப்பூர் எம்.எல்.ஏ. ஒருவரின் தகுதிநீக்கம் குறித்து சபாநாயகர் 4 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் குறித்து ஏற்கனவே நிலுவையில் இருக்கும் விவகாரங்கள் குறித்து சபாநாயகர் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ளது. இந்தத் தீர்ப்பு மிகச் சரியானது. கட்சி தாவல் மீதான தடையை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தின் 10-வது அட்டவணையில் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு, கட்சி தாவல் விவகாரங்களை விசாரிக்க தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்” என்று தெரிவித்தார். 
மணிப்பூர் வழக்கை உதாரணமாகக் கொண்டு ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்குமா என்ற பரபரப்பும் எழுந்துள்ளது.

click me!