கட்சியிலிருந்து விலகியது ஏன்?... கமல் மீது மநீம துணைத் தலைவர் மகேந்திரன் வைத்த பகீர் குற்றச்சாட்டு...!

By Kanimozhi PannerselvamFirst Published May 6, 2021, 7:02 PM IST
Highlights

தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகியதாக அறிவித்துள்ள துணைத் தலைவர் மகேந்திரன் அதற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ளார். 

சட்டமன்ற தேர்தலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி பல்வேறு தொகுதிகளில் படுதோல்வியை தழுவியது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கூட நீண்ட இழுபறிக்கிடையே, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,358 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். 

மேலும், அவருடைய கட்சி சார்பில் போட்டியிட்ட துணை தலைவர் மகேந்திரன், முக்கிய நிர்வாகிகளான சி.கே.குமரவேல், பழ.கருப்பையா, பொன்ராஜ், ஸ்ரீப்ரியா, சிநேகன், சந்தோஷ் பாபு உள்ளிட்டோரும் தோல்வியைச் சந்தித்தனர். சட்டமன்ற தேர்தலில் படு தோல்வியை தழுவியதோடு, வாக்கு சதவீதத்தில் 3வது இடத்தை கூட பிடிக்காமல் போனது. எனவே தோல்விக்கான காரணம் குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் மநீம வேட்பாளர்களுடன் கமல் ஹாசன் ஆலோசனை நடத்தினர். 

​அதில் தேர்தலில் தோல்வி அடைந்தது பற்றி அவர்களிடம்  பல விஷயங்களை அவர் கேட்டறிந்தார். கட்சியின் கட்டமைப்பில் மாற்றங்கள் வரும் என்றும், அது கடுமையாக இருக்கும் என்றும் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் கமல் ஹாசனின் கட்சியை விட்டு முக்கிய நிர்வாகிகள் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகியதாக அறிவித்துள்ள துணைத் தலைவர் மகேந்திரன் அதற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ள மகேந்திரன்,  நான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து உடனடியாக இன்றிலிருந்து விலகுகிறேன்.

இப்படிப்பட்ட ஒரு கடினமான முடிவினை நான் இன்று எடுப்பதற்கான காரணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் அனைவருக்கும் தெரிவிப்பது எனது முக்கியமான கடமையும் பொறுப்பும் ஆகும். நான் ஏன் இப்பொழுது கட்சியில் இருந்து விலகுகிறேன் என்பதற்கான விரிவான காரணத்தை உங்கள் அனைவரிடமும் இத்துடன் ஒரு விளக்க கடிதத்தை இணைத்துள்ளேன். 

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவது என்கின்ற கடினமான முடிவினை மிகக்கவனமாக எடுத்திருக்கின்றேன். கட்சியின் இத்துணை பெரிய தோல்விக்குப் பிறகும், தனது தோல்விக்குப் பின்னரும், தலைவர் அவர்கள் தனது அணுகுமுறையில் இருந்த மாறுபட்டு செயல்படுவதாக எனக்குத் தெரியவில்லை, மாறிவிடுவார் என்கின்ற நம்பிக்கையும் இல்லை. எனக்குத் தெரிந்த தலைவர் திரு.கமல் ஹாசன், கொள்கைக்காகவும், எளிய தொண்டர்களுக்கு தோழனாகவும், அனைத்து நல்ல தலைமைப் பண்புகளையும் கொண்ட நம்மவராக மறுபடியும் செயல்பட வேண்டும் என்று வெளியே இருந்து வாழ்த்துகின்றேன்.

தலைவர் கமல் ஹாசன் அவர்களால் நான் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருந்தாலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் உற்சாகமும் உத்வேகமும் தான் என்னை இந்த இரண்டரை ஆண்டுகளில், இரண்டு முக்கியமான தேர்தல்களை சந்திப்பதற்கான வலிமையை கொடுத்தது. அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.அரசியல் எனும் விதையை, எனக்குள் விதைத்த தலைவர் கமல் ஹாசன் அவர்களுக்கு என்மனமார்ந்த நன்றிகள்.

மக்கள் சேவையை எங்கிருந்து செய்தாலும், காந்தியார் சொன்னது போல் "Be the change what you want to see" (நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள்) என்பதற்கேற்ப சிறப்பாகவும் அறத்துடனும் செயல்படுவேன் என்ற உறுதியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விடை பெறுகிறேன் என விளக்கமளித்துள்ளார். 

click me!