அதிமுக கட்சி பெயர், கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை- சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

By Ajmal Khan  |  First Published Nov 7, 2023, 1:00 PM IST

அதிமுக கட்சி பெயர், மற்றும் கொடியை ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குழுவினர் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


அதிமுகவில் அதிகார மோதல்

அதிகார மோதல் காரணமாக 4 பிளவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. இதனையடுத்து நடைபெற்ற சட்ட போராட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் தான் தான் என ஓ.பன்னீர் செல்வம் கூறி வருகிறார். மேலும் அதிமுக கொடியையும், சின்னத்தையும் பயன்படுத்தி வந்தார். இதற்கு அதிமுக சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவல்நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது. இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Latest Videos

undefined

ஓபிஎஸ்க்கு எதிராக வழக்கு

அதில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரித்து உத்தரவிட்ட நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதன்காரணமாக தொண்டர்கள் மத்தியில் குழுப்பபமான சூழ்நிலை நிலவுவதாக கூறப்பட்டது. எனவே அதிமுகவின் சின்னம் மற்றும் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இ.பி.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், இந்த வழக்கு மூன்றாவது முறையாக விசாரணைக்கு வருகிறது, இதுவரை பதில் மனுதாக்கல் செய்யவில்லை,

குழப்பமான நிலை உருவாகும்

தன்னை பொது செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறி அவகாசம் வாங்கினார்கள்,  ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிட்டார். பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜலட்சுமி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு எண்ணிடப்பட்டு விட்டது,  இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளோம், குறுகிய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அப்போது நீதிபதி சதீஷ்குமார்,எத்தனை முறை இந்த விவகாரத்தில் இப்படி வழக்கு தொடர்வீர்கள்? நேரம் கேட்பீர்கள்? எத்தனைமுறை ஒரே வாதத்தை வைப்பீர்கள்? என கேள்வி எழுப்பினார்.எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், 5 மாதங்களில் முக்கியமான மக்களவை தேர்தல் வரவுள்ளது,  ஆனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக அதே பதவியை பயன்படுத்துகிறார்,  எங்களை கட்சியிலிருந்து நீக்கி அறிவிக்கிறார்,  பொதுமக்கள் மற்றும் கட்சியில் குழப்பம் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார் என வாதிடப்பட்டது.

அதிமுக பெயரை பயன்படுத்த தடை

இதனை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பொது செயலாளர் தேர்தல் செல்லும் என்கிற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்பதால், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

திமுக மாநில நிர்வாகியை அதிமுகவிற்கு தட்டி தூக்கிய எடப்பாடி.. அதிர்ச்சியில் ஸ்டாலின்

click me!