திமுக மாநில மீனவர் அணி துணை செயலாளர் முனைவர் நசரேத் பசிலியான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுகவை வலுப்படுத்தும் இபிஎஸ்
ஜெயல்லிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக பல பிளவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. இதன் காரணமாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ஒவ்வொரு மாவட்டமாக சென்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார். மேலும் 2 கோடி தொண்டர்களை சேர்த்தும் அரசியல் கட்சிகளை எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி கொடுத்துள்ளார். கடந்த சில மாதங்களாக பாஜகவின் மாநில நிர்வாகிகளை அடுத்தடுத்து அதிமுகவில் இணைத்த நிலையில் தற்போது திமுக நிர்வாகியையும் அதிமுகவிற்கு தட்டி தூக்கியுள்ளார்.
அந்த வகையில், திமுக மாநில மீனவர் அணி துணை செயலாளர் நசரேத் பசிலியானுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையென கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.