மோடி மனது வைத்தால் ஆட்சி மாற்றம்... ஜெயலலிதாவுக்கு பாராட்டு... வேலூரில் மாறிபோன மு.க. ஸ்டாலின் முழக்கம்!

By Asianet TamilFirst Published Jul 29, 2019, 10:19 AM IST
Highlights

மோடியா, லேடியா எனப் பார்ப்போம் என சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூறினார். இதற்காக ஜெயலலிதாவை பாராட்டுகிறேன். ஆனால், அவருடைய பெயரைச் சொல்லி நடக்கும் ஆட்சியை டெல்லியில் அடகு வைத்துவிட்டனர்.

வேலூர் தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மு.க. ஸ்டாலின் பாராட்டி பேசினார். இதேபோல மோடி மனது வைத்தால் ஆட்சி மாற்றம் என்றும் ஸ்டாலின் பேசியிருப்பது அரசியல் அரங்கில் உற்று பார்க்கப்படுகிறது/ 
வேலூரில் ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், வேலூரில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாடலினும் மாறிமாறி பிரசாரத்தில் ஈடுபட்டுவருவதால் வேலூரில் அரசியல் பரபரப்பு கூடியிருக்கிறது. வேலூர் பிரசாரத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் பிரதமர் மோடியையும் குறிப்பிட்டு ஸ்டாலின் பேசியது அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

 
இந்த இரு தலைவர்கள் பற்றியும் மு.க. ஸ்டாலின் பேசிய பேச்சுகள் சில இதுதான். “சட்டப்பேரவை இடைத் தேர்தலில் திமுக இன்னும் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் எடப்பாடி பழனிசாமி ஆட்சி முடிவுக்கு வந்திருக்கும். தற்போதும்கூட எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று உறுதியாக கூற முடியாது. கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுபோல தமிழகத்திலும் ஏற்படலாம். அது மோடி நினைத்தால் நடக்கும். எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும்  மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார்கள். அதனால் மோடி அதைப் பற்றி நினைக்கவில்லை.


கருணாநிதியும் ஜெயலலிதாவும் இருக்கும்வரை மத்திய அரசால் நீட் தேர்வு கொண்டுவர முடியவில்லை. ஜெயலலிதா சர்வாதிகாரியாகவே இருந்தாலும் தமிழகத்தின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. மோடியா, லேடியா எனப் பார்ப்போம் என சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூறினார். இதற்காக ஜெயலலிதாவை பாராட்டுகிறேன். ஆனால், அவருடைய பெயரைச் சொல்லி நடக்கும் ஆட்சியை டெல்லியில் அடகு வைத்துவிட்டனர்.” என்று மு.க. ஸ்டாலின் நேற்றைய கூட்டத்தில் பேசியிருக்கிறார்.


கடந்த காலங்களில் மோடியையும் ஜெயலலிதாவையும் விமர்சித்து பேசி வந்ததற்கு மாறாக ஸ்டாலின் அவர்களை குறைகூறாமல் பேசத் தொடங்கியிருக்கிறார். இதற்கு முன்பு அதிமுக ஆட்சிக்கு மோடி முட்டுக் கொடுத்துவருகிறார் என்றே ஸ்டாலின் விமர்சித்துவந்திருக்கிறார். ஆனால், தற்போது மோடி மனது வைத்தால் ஆட்சி மாற்றம் நடக்கும் என்று ஸ்டாலின் பேசத் தொடங்கியிருக்கிறார். இதேபோல கருணாநிதி இருந்தவரை நீட் தமிழகத்துக்குள் வரவில்லை என்று பேசிவந்த ஸ்டாலின், தற்போது கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும்வரை நீட் தேர்வை கொண்டுவர முடியவில்லை என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உண்மையான அதிமுகவினர் திமுகவுக்கு வர வேண்டும் என்று ஸ்டாலின் அழைப்புவிடுத்து பேசினார். தற்போது ஜெயலலிதாவை பாராட்டி பேசும் அளவுக்கு அவருடைய பேச்சில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

click me!