அதிமுக கூட்டணியில் பிளவு..? முகம் திருப்பிக் கொள்ளும் பாமக - தேமுதிக!

By Asianet TamilFirst Published Jul 29, 2019, 9:50 AM IST
Highlights

 ராமதாஸின் 80-வது முத்து விழாவையொட்டி அவருக்கு முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தார்கள்.  ஆனால், கூட்டணியில் இருக்கும்  தேமுதிக சார்பில் ராமதாஸுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறவில்லை. 

அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கும் தேமுதிகவுக்கு கூட்டணி இருக்கிறதா இல்லையா என்று கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
2005-ல் விஜயகாந்த் கட்சி தொடங்கியதிலிருந்து இரு கட்சிகளும் எலியும் பூனையுமாகவே இருந்தன. காரணம், பாமக ஆதிக்கம் செலுத்திய வட மாவட்டங்களில் தேமுதிக அக்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது முதலே இரு கட்சிகளுக்கும் ஆகாது என்ற நிலைதான் இருந்தது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இரு கட்சிகளும் இடம்பெற்றன. இத்தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக 14 தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியது. பாமக ஓட்டு தேமுதிகவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூட இருந்த குழிப் பறித்துவிட்டார்கள் என்றும் தேமுதிக பாமகவை விமர்சித்தது.


ஆனால், இதுபோன்ற கசப்புகளை மறந்துதான் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இடம் பெற்றன. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி பாமகவும் தேமுதிகவும் இடம் பெற்றன. பாமகவுக்கு எடுத்த எடுப்பிலேயே 7+1 தொகுதிகளை அதிமுக ஒதுக்கீடு செய்தது. இதனால், அதிருப்தி அடைந்த தேமுதிக அதிமுக கூட்டணியில் இழுபறி நிலையை ஏற்படுத்தியது. கடைசியில் வேறு வழியில்லாமல் 4 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட ஒத்துக்கொண்டது. கூட்டணி முடிவானதும் விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று அவரிடம் டாக்டர் ராமதாஸ் நலம் விசாரித்தார். இது அரசியல் அரங்கில் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது.
தேர்தலில் இரு கட்சிகளும் படுதோல்வி அடைந்தன. என்றாலும்  இரு கட்சிகளும் அதிமுகவோடு இணக்கமான போக்கைக் கடைப்பிடித்துவருகிறார்கள். மாறாக, தேமுதிக, பாமக கட்சிகள் ஒதுங்கி இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. அது அண்மையில் ராமதாஸின் முத்து விழாவிலும் எதிரொலித்திருக்கிறது. ராமதாஸின் 80-வது முத்து விழாவையொட்டி அவருக்கு முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

 
ஆனால், கூட்டணியில் இருக்கும்  தேமுதிக சார்பில் ராமதாஸுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறவில்லை. அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தோ, பொருளாளர் பிரேமலதாவோ ராமதாஸுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. பாமகவை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் கூட ராமதாஸுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், தேமுதிக சார்பில் ஏன் வாழ்த்து தெரிவிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன் வழக்கம்போல இரு கட்சிகளும் பழைய நிலைக்கே சென்றுவிட்டார்களா என்றும் கருத வேண்டியிருக்கிறது. இரு கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருப்போம் என்று பேசிவருகிறார்கள். ஆனால், ஒரே கூட்டணியில் இருந்தாலும் எண்ணெயும் தண்ணீருமாக இருப்பார்களா என்றும் எதிர்நோக்கப்படுகிறது.

click me!