உள்ளாட்சித் தேர்தல்...! மாவட்டச் செயலாளர்களுக்கு டார்கெட் பிக்ஸ் செய்த மு.க.ஸ்டாலின்..!

By Selva KathirFirst Published Jun 26, 2021, 7:51 PM IST
Highlights

மேயர் பதவியில் ஒன்று கூட அதிமுகவிற்கு சென்றுவிடக்கூடாது, அதே போல் மாவட்டங்கள் அனைத்திலும் திமுக வேட்பாளர்கள் 90 சதவீதம் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது தான் அந்த டார்கெட் என்கிறார்கள். இதனை அச்சீவ் செய்ய முடியவில்லை என்றால் அவர்கள் பதவி பறிப்பு உறுதி என்று கூட்டத்தில் இருந்து வெளியே வந்த போது நிர்வாகிகள் பேசிக் கொண்டே சென்றதை கேட்க முடிந்தது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பெரிதாக தனக்கிருந்த கோபத்தை காட்டிக் கொள்ளாமல் பேசி முடித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மட்டுமே மு.க.ஸ்டாலின் ஆர்வம் காட்டினார். தினசரி 18 மணி நேரம் வரை இதற்காக ஸ்டாலின் பணியாற்றிக் கொண்டிருந்தார். தலைமைச் செயலகம் மட்டும் அல்லாமல் வீட்டிலும் அதிகாரிகளுடன் ஆலோசனை, கள நிலவரம் குறித்த விவாதம் என எந்த நேரமும் கொரோனா பணிகளில் ஸ்டாலின் மும்முரமாக இருந்தார். இதனால் ஆட்சிக்கு வந்த பிறகு கட்சிப்பணிகளை அவர் கண்டுகொள்ளவில்லை. இதுநாள் வரை ஸ்டாலினுக்காக கட்சிப்பணிகளை மறைமுகமாக கவனித்து வந்தவர் சபரீசன்.

அவரும் தேர்தலுக்கு பிந்தைய சில பணிகளில் பிசியாகிவிட்டார். இதனால் கட்சி கட்டுப்பாடில்லாத ஓடம் போல் தத்தளிக்க ஆரம்பித்தது. தினமும் கட்சி தொடர்பாக ஏதேனும் சர்ச்சைகள் வெடித்தனர். அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மோதல், மாவட்டச் செயலாளர்கள் எம்எல்ஏக்கள் கருத்து வேறுபாடு என தொடர்ந்து அறிவாலயத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதற்கு இடையே மின்வெட்டு, தடுப்பூசி பற்றாக்குறை போன்ற விஷயங்களை வைத்து அதிமுக அரசியல் செய்ய அது களத்தில் திமுகவிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொடுக்க ஆரம்பித்தது.

இதனை எல்லாம் சரி செய்ய வேண்டிய சூழலில் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் செப்டம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கும்பட்சத்தில் கட்டாயமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்கிற நிர்பந்தம் திமுக அரசுக்கு உள்ளது. அதே சமயம் கடந்த ஆட்சியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தேர்வாகியுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. ஆனால் பதவியில் உள்ளவர்களில் சுமார் 40 முதல் 45 சதவீதம் பேர் தான் திமுகவினர். அந்த வகையில் ஊரகப்பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் அதிமுகவினர் அதிகம் பதவியில் உள்ளனர்.

எனவே ஊரக உள்ளாட்சிப் பதவி அமைப்புகளை கூண்டோடு கலைத்துவிட்டு கடந்த கலைஞர், ஜெயலலிதா ஆட்சியில் நடத்தியதை போல் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த ஸ்டாலின் விரும்புகிறார். இதன் மூலம் ஒட்டு மொத்த உள்ளாட்சிப்பதவிகளையும் திமுக வசம் கொண்டு வர முடியும் என்று அவர் நம்புகிறார். ஆனால் ஏற்கனவே பதவியில் உள்ள திமுகவினர் இன்னும் இரண்டரை ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கிறதே என யோசிப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு மறுபடியும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்கிற உறுதிமொழியுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். இதற்கு காரணம் கொங்கு மண்டலத்தில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மேயர்கள், நகராட்சி தலைவர்கள் இருந்தால்தான் நாடாளுமன்ற தேர்தலில் தப்பிக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.

இதனால் தான் உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவை அடிப்படையாக வைத்து செப்டம்பருக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது என்று முடிவுக்கு வந்துள்ளது திமுக மேலிடம். இது குறித்த தகவல்களை மாவட்டச் செயலாளர்களிடம் தெரிவிக்கவே அவரச கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தேர்தலில தோல்வி அடைந்த மாவட்டச் செயலாளர்களை ஒரு பிடி  பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அப்படி எதையும் பேசவில்லை என்கிறார்கள். மாறாக ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் டார்கெட் பிக்ஸ் செய்யப்படும் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

உதாரணத்திற்கு மேயர் பதவியில் ஒன்று கூட அதிமுகவிற்கு சென்றுவிடக்கூடாது, அதே போல் மாவட்டங்கள் அனைத்திலும் திமுக வேட்பாளர்கள் 90 சதவீதம் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது தான் அந்த டார்கெட் என்கிறார்கள். இதனை அச்சீவ் செய்ய முடியவில்லை என்றால் அவர்கள் பதவி பறிப்பு உறுதி என்று கூட்டத்தில் இருந்து வெளியே வந்த போது நிர்வாகிகள் பேசிக் கொண்டே சென்றதை கேட்க முடிந்தது.

click me!