அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. தனித்து போட்டியிடும் தேமுதிக..? உறுதிப்படுத்திய எல்.கே.சுதீஷ்

By karthikeyan VFirst Published Mar 1, 2021, 8:02 PM IST
Highlights

அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷின் முகநூல் பதிவு.
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. ஆளுங்கட்சியான அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு பணிகளை  முடுக்கிவிட்டுள்ளது. பாமகவுடனான கூட்டணியை உறுதி செய்து, பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன.

பாஜகவுடனான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இன்னும் எத்தனை தொகுதிகள் என்பது உறுதியாகவில்லை. அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 18லிருந்து 23 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான ஈபிஎஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இன்னும் தொகுதிகள் குறித்த உடன்பாடு எட்டப்பட்டு அறிவிக்கப்படவில்லை என்றாலும் அதிமுக  - பாஜக கூட்டணி உறுதி.

ஆனால் தேமுதிக தான் கெடுபிடி காட்டியதுடன், கூட்டணியையும் முறித்துக்கொண்டுள்ளது. முதற்கட்டமாக தேமுதிகவுடனான கூட்டணி குறித்து பேச, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான கேபி. முனுசாமி ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில் அவரை சந்தித்து பேசினர்.

இதையடுத்து 2ம் கட்ட பேச்சுவார்த்த அமைச்சர் தங்கமணி இல்லத்தில் நடந்தது. தேமுதிக சார்பில் அக்கட்சி நிர்வாகிகளான பார்த்தசாரதி, இளங்கோவன் மற்றும் அழகாபுரம் மோகன் ராஜ் ஆகியோர், அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி மற்றும் அதிமுக நிர்வாகிகளான கேபி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மணிக்கணக்காக நடந்த இந்த பேச்சுவார்த்தையும் உடன்பாடு எட்டப்படவில்லை.

பாமகவிற்கு ஒதுக்கிய அதே 23 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் கோரியது தேமுதிக. ஆனால் அதற்கு அதிமுக உடன்படவில்லை. அதிகபட்சம் 12 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்தது. இதையடுத்து கூட்டணியில் பிளவு ஏற்படலாம் என்ற தகவல் வலம்வந்த நிலையில், தேமுதிக துணை செயலாலர் எல்.கே.சுதீஷின் முகநூல் பதிவு அதை உறுதிப்படுத்தியுள்ளது.

எல்.கே.சுதீஷ், நமது முதல்வர் விஜயகாந்த்; நமது சின்னம் முரசு என முகநூலில் பதிவிட்டுள்ளார். தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த நிலையில், அந்த கூட்டணியை முறித்துக்கொள்வதை உறுதிப்படுத்தியுள்ளது எல்.கே.சுதீஷின் பதிவு.
 

click me!