தமாக தயாரித்துள்ள 27 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளுக்கு ஜி.கே. வாசன் குறி..!

By Asianet TamilFirst Published Feb 10, 2021, 8:10 AM IST
Highlights

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட 27 வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அடையாளம் கண்டிருக்கிறது. 
 

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அதிமுக - திமுக ஆகிய கட்சிகள் தீவிர  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திமுக - அதிமுக என இரு கூட்டணியிலும் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் அதிகாரபூர்வமற்ற முறையில் தொடங்கியுள்ளன. கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் கண்டு பேச்சிவார்த்தைக்கு தயாராகிவருகின்றன. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் உள்ள தமாக தங்கள் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் கண்டு பேச்சுவார்த்தைக்கு தயாராகியுள்ளது.


கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்று 26 தொகுதிகளில் தமாக போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலக்கத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்று அக்கட்சி திட்டமிட்டுள்ளது. அதற்காக தமிழகத்தில் 27 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தொகுதிகளிலிருந்து தமாகவுக்கு தொகுதிகள் ஒதுக்கினால், நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்று அக்கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.


இதன்படி பாபநாசம், ஈரோடு, மதுரை, திருப்பூர், வேளச்சேரி உள்ளிட்ட தொகுதிகள் மீது தமாக குறி வைத்துள்ளது. சில தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்பது வரை அக்கட்சி முடிவு செய்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்படி பாபநாசத்தில் சுரேஷ் மூப்பனார், வால்பாறையில் கோவை தங்கம், பட்டுக்கோட்டையில் என்.ஆர். ரங்கராஜன், ஈரோட்டில் விடியல் சேகர், சிவகங்கையில் உடையப்பன், மதுரையில் ஏஜிஎஸ் ராம்பாபு ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது. தமாகவுக்கு அதிமுக கூட்டணியில் எத்தனை  தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும், அதில் கேட்டத் தொகுதிகள் கிடைக்குமா என்பது பேச்சுவார்த்தை முடியும்போது தெரிந்துவிடும்.  

click me!