திமுக - காங்கிரஸ் கூட்டணி டமாரு... காங்கிரஸ், கமல், ஓவைசி புதுக்கூட்டணி... ஹெச்.ராஜா தாறுமாறு கணிப்பு..!

By Asianet TamilFirst Published Feb 9, 2021, 9:34 PM IST
Highlights

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கேட்கும் இடங்களை திமுக கொடுக்க மறுத்துவருவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே, காங்கிரஸ், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், ஓவைசி ஆகிய கட்சிகள் சேர்ந்து கூட்டணி சேரலாம் என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
 

தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகம் திரும்பியுள்ள சசிகலா என்ன வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம். ஆனால், அதற்கும் அதிமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அமமுகவில் தினகரன் இடத்துக்கு வேண்டுமானால் சசிகலா வரலாம். சசிகலா வருகையால் அதிமுகவில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் திமுக பலவீனமாகிவருகிறது. கடந்த 50 ஆண்டுகாலங்களில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் உருவான மருத்துவர்கள், பொறியாளர்கள் என பலருக்கும் அடிப்படைத் தமிழே தெரியாது. திராவிட இயக்கங்கள்தான் இப்படித் தமிழை அழித்தன. 
திமுக தலைவர்களுடைய வாரிசுகள் நடத்தும் பள்ளிகள் எதிலும் தமிழுக்கு இடமே இல்லை. தமிழ்நாட்டுக்கு இருமொழிக் கொள்கையையும் தன் வீட்டுக்கு மும்மொழிக் கொள்கையையும் அவர்கள் பின்பற்றுகிறார்கள். எம்மதமும் சம்மதம் என்று சொல்வது சரியானது என்றால், எம்மொழியும் எம்மொழி என்று சொல்வது எப்படித் தவறாகும்? தமிழகத்தில் தமிழை வளர்க்க நினைக்கும் ஒரே கட்சி பாஜக மட்டுமே. ஆண்டாளை இழிவாகப் பேசிய வைரமுத்துவைக் கைது செய்யவில்லை. முகமது நபிகள் குறித்துப் பேசியதாக பாஜக நிர்வாகி கல்யாணராமனைக் கைது செய்தது பாரபட்சமான நடவடிக்கையாகும்.


திமுக கூட்டணியில் காங்கிரஸ் கேட்கும் இடங்களை திமுக கொடுக்க மறுத்துவருவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே, காங்கிரஸ், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், ஓவைசி ஆகிய கட்சிகள் சேர்ந்து கூட்டணி சேரலாம். விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நடைபெறும். தொகுதிப் பங்கீடு சுமுகமாக நடந்து முடிக்கும். தமிழகத்தின் எல்லா கிராமத்திலும் பாஜக கொடியைப் பார்க்க முடியாமல் உள்ளே செல்ல முடியவில்லை என்று எங்களை விமர்சனம் செய்பவர்களே சொல்கிறார்கள். எனவே, பாஜகவின் வளர்ச்சிக்கேற்ப தொகுதிப் பங்கீடு இருக்கும்” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.

click me!