தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகளில் ஜெயிக்கணும்... உதயநிதியின் தெறிக்கவிடும் டார்கெட்..!

By Asianet TamilFirst Published Feb 9, 2021, 9:18 PM IST
Highlights

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டத்தில் உள்ள  ஆண்டிபட்டியில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ எனும் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “2019-இல் ஆண்டிபட்டியில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுகவை 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தீர்கள். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளரை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்கள்தான் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள்.

 
பிரதமர் மோடி திமுக மீதும் தமிழக மக்கள் மீதும் கோபத்தில் உள்ளார். இந்தியாவிலேயே மோடி அலை வீசியபோது தமிழக மக்கள் மட்டும் அவருக்கு எதிராக இருந்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு இரண்டு அடிமைகள் சேர்ந்து நீட் தேர்வை தமிழ்நாட்டில் திணித்துவிட்டார்கள். இதனால், இதுவரை நம்முடைய 14 குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். கல்விக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.


பிரதமர் மோடிக்கு யார் சிறந்த அடிமை என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே போட்டி நடந்துகொண்டிருக்கிறது. டீக்கடை நடத்திவந்த துணை முதல்வருக்கு இத்தனை கோடி சொத்துகள் எப்படி வந்தன? சசிகலா வந்தவுடன் அவர் நுழைந்துவிடுவார் என்பதற்காக ஜெயலலிதாவின் நினைவிடம், கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்துவிட்டார்கள். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும். மு.க. ஸ்டாலின் கூறியதுபோல, திமுக ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களுக்குள் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் தீர்த்துவைப்போம்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார். 
 

click me!